உக்ரேன்-ரஷ்யா அமைதிக்கான உச்சநிலைச் சந்திப்பை ஏற்று நடத்த துருக்கிய அதிபர் விருப்பம்

உக்ரேன்-ரஷ்யா அமைதிக்கான உச்சநிலைச் சந்திப்பை ஏற்று நடத்த துருக்கிய அதிபர் விருப்பம்

1 mins read
4299cba8-4dea-48b8-9b64-78fc306a1da2
உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி (இடது), துருக்கிய அதிபர் ரிச்செப் தயிப் எர்துவான் இருவரும் மார்ச் 8ஆம் தேதி இஸ்தான்புல்லில் செய்தியாளர் கூட்டத்தை நடத்தினர். - படம்: ஏஎஃப்பி

இஸ்தான்புல்: உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதன் தொடர்பில் உச்சநிலைச் சந்திப்பை ஏற்று நடத்தத் தயாராக இருப்பதாகத் துருக்கிய அதிபர் ரிச்செப் தயிப் எர்துவான் கூறியிருக்கிறார்.

இஸ்தான்புல்லில் மார்ச் 8ஆம் தேதி, உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கியைச் சந்தித்துப் பேசிய பிறகு அவர் அவ்வாறு தெரிவித்தார்.

இரு தலைவர்களும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கலந்துரையாடினர்.

ரஷ்யப் படையெடுப்பு குறித்த அண்மைய நிலவரம், கருங்கடலில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு, தற்காப்பு ஒத்துழைப்பு போன்ற அம்சங்கள் குறித்து அவர்கள் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேட்டோ அமைப்பில் இடம்பெற்றிருக்கும் துருக்கி, உக்ரேன் தனது எல்லையைத் தற்காப்பதை ஆதரிக்கும் வேளையில் ரஷ்யாவுடனும் நல்லுறவைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது.

மாஸ்கோ, கியவ் என இருதரப்புடனும் வழக்கமான இடைவெளியில் துருக்கி பேச்சு நடத்திவருகிறது. உக்ரேனின் தானிய ஏற்றுமதிக்கு ரஷ்யா விதித்த தடையை விலக்கும் கருங்கடல் ஒப்பந்தம் தொடர்பில் துருக்கியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டில் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுச் சந்திப்பை துருக்கி ஏற்று நடத்தியது. அதைத் தொடர்ந்து அரசதந்திர நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதை அது சுட்டியது.

உச்சநிலைச் சந்திப்பின் அவசியத்தை அது பலமுறை வலியுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்