வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் வெள்ளை மாளிகை நிர்வாகத்தை மீண்டும் கைப்பற்றத் துடிக்கும் டோனல்ட் டிரம்பும் ஜார்ஜியா மாநில வாக்காளர்களைக் கவரும் விதமாக எதிரெதிர் கருத்துகளை வெளிப்படுத்தினர்.
சனிக்கிழமை (மார்ச் 9) ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வுகளில் குடிநுழைவு மற்றும் வயது தொடர்பான கருத்துகளை மையமாகக் கொண்டு அவ்விருவரும் பேசினர்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் கறுப்பின மக்கள் மற்றும் ஹிஸ்பானிய மக்களின் ஆதரவைத் திரட்ட நடத்தப்பட்ட பேரணியில் திரு பைடன் உரையாற்றினார்.
ஒருநாள் சர்வாதிகாரி ஆவேன் கூறிய திரு டிரம்பைத் தாக்கி அவர் பேசினார்.
“சர்வாதிகாரி ஆக விரும்புவதாக அவர் (டிரம்ப்) கூறியதை நான் நம்புகிறேன்,” என்றார் திரு பைடன்.
மேலும் அந்தக் கூட்டத்தில் உரையாற்றிய திரு பைடன், வீடமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்விக் கட்டணத்தைக் குறைக்கப் போவதாக உறுதி அளித்தார். அமெரிக்கப் பொருளியலின் பலத்தை அவர் அப்போது சுட்டிக்காட்டினார்.
பின்னர், சனிக்கிழமை இரவு எம்எஸ்என்பிசி தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்த அவர், ஜார்ஜியாவில் சென்ற மாதம் தாதிமைப் படிப்பு மாணவர் ஒருவரைக் கொலை செய்தவர் பற்றிக் குறிப்பிடும்போது ‘சட்டவிரோதம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக வருத்தமடைவதாகக் கூறினார்.
“சட்டவிரோதக் குடியேறி என்பதற்குப் பதில் ஆவணமற்றவர் என்று நான் குறிப்பிட்டு இருக்க வேண்டும்,” என்றார் திரு பைடன்.
தொடர்புடைய செய்திகள்
சட்டவிரோதம் என்ற வார்த்தையை எதிர்த்தரப்பு குடியரசுக் கட்சியினர் அடிக்கடி பயன்படுத்தி வருவதாகவும் அதனை திரு பைடன் உச்சரித்திருக்கக் கூடாது என்றும் அவரது சொந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள் குறைகூறி இருந்தனர்.
அதேநேரம், கொலையுண்ட மாணவர் விவகாரம் குறித்து சனிக்கிழமை நீண்ட உரையாற்றிய திரு டிரம்ப், சட்டவிரோதக் குடியேறிகளைத் துடைத்தொழிக்கப் போவதாக உறுதி அளித்தார்.

