தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தென்கொரிய மருத்துவர்கள் போராட்டத்தால் நோயாளிகள் அவதி

2 mins read
d1a3fe48-ba60-43d7-809b-cbc40b30fcfa
மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் 50 விழுக்காட்டு அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

சோல்: தென்கொரியாவில் மருத்துவர்கள் போராட்டம் செய்வதால் நோயாளிகள் பலரும் அவதியுறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவிலும் அறுவை சிகிச்சை அரங்குகளிலும் முக்கியப் பணிகளில் ஈடுபடும் பயிற்சி மருத்துவர்கள், கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாகப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

மருத்துவக் கல்லூரிகளில் ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாக 2,000 மாணவர்களைச் சேர்க்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

அதிபர் யூன் சுக்-இயோலின் அரசாங்கம் அதன் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது.

சுகாதாரப் பராமரிப்பில் கூடுதல் பொறுப்புகளை ஏற்க, தாதியருக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

ராணுவ மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன. ராணுவ மருத்துவர்கள் சிலர் பொதுமக்களுக்கான மருத்துவமனைகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தென்கொரியாவில் 13,000 பயிற்சி மருத்துவர்கள் பணியில் உள்ளனர். மார்ச் மாதத் தொடக்கத்தில் அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று அரசாங்கம் கெடு விதித்தது. ஆனால் அவர்களில் 90 விழுக்காட்டினர் அதற்கு மசியவில்லை என்கிறது யோன்ஹாப் செய்தி நிறுவனம்.

மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் 50 விழுக்காட்டு அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாகவும் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் தென்கொரிய அரசாங்கம் கூறுகிறது.

போராட்டம் நடைபெறும் வேளையில், அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் பணிபுரியும் மருத்துவர்கள், நோயாளிகளைப் பராமரிப்போர் ஆகியோருக்கு, சுகாதாரக் காப்பீட்டு நிதியில் இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்காகக் கூடுதலாக 188.2 பில்லியன் வோன் (S$190 மில்லியன்) நிதி வழங்கப்படும் என்று சுகாதார, நல்வாழ்வு அமைச்சு தெரிவித்துள்ளது.

போராட்டத்தால், நோயைக் கண்டறிய உதவும் சிகிச்சைகள் பலவும் தள்ளிப்போடப்பட்டுள்ளன. இத்தகைய காலதாமதம் சிக்கல்களுக்கு வழிவகுக்குமென அஞ்சப்படுகிறது.

நோயாளிகளைப் பராமரிக்கத் தவறுவோரை மருத்துவர்கள் என்றே அழைக்கக்கூடாது என்று பாதிக்கப்பட்டோர் குமுறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்