தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களில் குறைந்தது 13,000 பேர் பயங்கரவாதிகள்: நெட்டன்யாகு

2 mins read
50a51135-fe90-4e3d-abcf-01f834da3552
இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு. - படம்: ராய்ட்டர்ஸ்

பிராங்ஃபர்ட்: இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு, காஸாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களில் குறைந்தது 13,000 ‘பயங்கரவாதிகளும்’ அடங்குவர் என்று மார்ச் 10ஆம் தேதி கூறியுள்ளார்.

காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடரும் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் போராளிகள் இஸ்‌ரேலில் மேற்கொண்ட தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 253 பேர் பிணை பிடிக்கப்பட்டனர்.

அதற்குப் பதிலடியாக இஸ்‌ரேல் தொடுத்த போரில் ஏறக்குறைய 31,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.

அவர்களில் பொதுமக்களின் எண்ணிக்கையைப் பிரித்துச் சொல்லாவிட்டாலும் கொல்லப்பட்டோரில் 72 விழுக்காட்டினர் பெண்களும் சிறுவர்களும் என்று காஸா சுகாதார அமைச்சு கூறுகிறது.

கொல்லப்பட்டதாகக் கூறப்படும் போராளிகளின் எண்ணிக்கையை மறுத்த ஹமாஸ் அமைப்பு, இஸ்‌ரேல் பொய்யான வெற்றியைச் சித்திரிப்பதாகக் கூறியது.

ஹமாசைத் தோற்கடிக்க ராஃபா வட்டாரத்தில் ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்துவது முக்கியம் என்றும் அதன் பிறகு சில வாரங்களில் வெற்றி கிட்டும் என்றும் திரு நெட்டன்யாகு கூறியதாக பில்ட் செய்தித்தாள் கூறியது.

பொதுமக்களை வெளியேற்றும் திட்டத்தை வரையாமல் ராஃபாவில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்க வேண்டாமென அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திரு நெட்டன்யாகுவிடம் வலியுறுத்தியுள்ளார்.

காஸாவின் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்களில் பாதிப் பேர் ராஃபாவில் தங்கியுள்ளனர்.

ராஃபா படையெடுப்பை வரம்பு மீறிய நடவடிக்கையாகக் கருதலாமா என்ற கேள்விக்குப் பதிலளித்த திரு பைடன், “அது வரம்பு மீறிய நடவடிக்கைதான். ஆனால் இஸ்‌ரேலுக்கான ஆதரவை நான் கைவிடப் போவதில்லை. இஸ்ரேலின் தற்காப்பு மிக முக்கியம். எனவே, தாண்டக்கூடாத எல்லை என்று எதுவுமில்லை என்பதால் ஆயுத விநியோகத்தை நிறுத்தி அவர்களின் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்கப் போவதில்லை,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்
இஸ்‌ரேல்பாலஸ்தீனம்