இந்தோனீசியாவில் வெள்ளம், நிலச்சரிவு; இறந்தவர் எண்ணிக்கை 26க்கு அதிகரிப்பு

இந்தோனீசியாவில் வெள்ளம், நிலச்சரிவு; இறந்தவர் எண்ணிக்கை 26க்கு அதிகரிப்பு

1 mins read
44a9fb06-e6a1-4184-a917-f5a8ec813a5f
புதைந்த உடல்களை மீட்புக் குழுவினர் எடுத்துச் செல்கின்றனர். - படம்: இபிஏ

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் சுமத்ரா தீவில் நிகழ்ந்த வெள்ளம், நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26க்கு அதிகரித்துள்ளது என்று மார்ச் 11ஆம் தேதி அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறைந்தது 11 பேரைக் காணவில்லை என்று அவர்கள் கூறினர்.

மார்ச் 7ஆம் தேதி பெய்த கனமழையால் மேற்கு சுமத்ராவில் பேரிடர் ஏற்பட்டது. ஆறுகள் நிரம்பி வழிந்தன. நிலச்சரிவுகளில் பல வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டன.

“இதுவரை 26 பேர் இறந்துவிட்டனர். 11 பேரைக் காணவில்லை,” என்று தேசிய பேரிடர் நடவடிக்கை முகவை தனது அறிக்கையில் தெரிவித்தது.

பெசிசிர் செலாடன் மாவட்டத்தில் 23 பேர் இறந்துகிடந்தனர். ஆறு பேர் இன்னமும் தேடப்பட்டு வருகின்றனர் என்று மேற்கு சுமத்ரா பேரிடர் நடவடிக்கை அமைப்பின் பேச்சாளர் திரு ஃபஜார் சுக்மா கூறினார்.

பாடாங் பாரியமன் மாவட்டத்தில் மூவர் இறந்துகிடந்தனர் என்றார் அவர். பருவநிலை மோசமாக இருப்பதால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“இன்றும் மழை பெய்தது. அந்த மழையிலும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றன,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்