பினாங்கில் கண்விழிப்புச் சடங்கில் கலந்துகொண்ட பிறகு காணாமல்போன 28 வயது சிங்கப்பூரர் ஒருவர், செவ்வாய்க்கிழமை பள்ளத்தாக்கில் மாண்டுகிடக்கக் காணப்பட்டதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜார்ஜ்டவுனில் ஃபர்லிம் எனும் பகுதியிலிருந்து ரிலாவில் உள்ள தமது வீட்டிற்குச் சென்றுகொண்டு இருந்தபோது திரு பெனட் சியூ வெய் ஃபங் ஓட்டிய கார் 50 மீட்டர் ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்தது.
திரு சியூவை தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியாததால் அவர் காணாமல்போனதை அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவர் மார்ச் 9ஆம் தேதி காலை கண்டறிந்ததாக ஜார்ஜ்டவுன் மாவட்ட காவல் நிலைய கண்காணிப்பாளர் ஷஹ்ருல் நிஸா அப்துல்லா ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
“அப்பகுதியில் உள்ள புதிய நெடுஞ்சாலை ஒன்றில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்ட ஊழியர்கள் சிலர் பாதிக்கப்பட்டவரைக் கண்டறிந்தனர். அங்குள்ள வனப்பகுதியில் காரை அவர்கள் கண்டனர்,” என்றார் போக்குவரத்துக் காவல்துறையைச் சேர்ந்த திரு ஷஹ்ருல்.
ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொண்டனர். காருக்கு வெளியே அந்த ஆடவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
திரு சியூவின் சடலம் இப்போது பினாங்கு பொது மருத்துவமனையில் இருப்பதாகவும் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய புதன்கிழமை பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் திரு ஷஹ்ருல் தெரிவித்தார்.