அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களம் காணும் ஜோ பைடன், டோனல்ட் டிரம்ப்

2 mins read
f009d596-a51e-4203-9393-b56c02f7bf3b
இவ்வாண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் களம் காணும் ஜோ பைடன், டோனல்ட் டிரம்ப். -  படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், டோனல்ட் டிரம்ப் இருவரும் மீண்டும் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டி போட உள்ளனர்.

திரு பைடன் ஜனநாயகக் கட்சி சார்பாகவும் திரு டோனல்ட் டிரம்ப் குடியரசுக் கட்சி சார்பாகவும் தேர்தலில் போட்டி போட தேர்வு பெற்றுள்ளனர்.

ஏற்கெனவே போட்டி போட்ட இருவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்யிடும் நிகழ்வு கடந்த கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக நிகழாத ஒன்று என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஜனநாயகக் கட்சி சார்பாக களம் இறங்க திரு பைடனுக்கு 1,968 கட்சிப் பேராளர்கள் தேவையான நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 12) அன்று ஜார்ஜியா மாநிலத்தில் நடந்த முன்னோடி வாக்கெடுப்பு மூலம் அதைப் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது நடந்து சில மணிநேரத்தில் திரு டிரம்ப் குடியரசுக் கட்சி சார்பாக அவருக்கு தேவைப்பட்ட 1,215 பேராளர்களைப் பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது.

ஜார்ஜியா மாநிலத்தில்தான் டிரம்ப் மீது 2020ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை மாற்றும் முயற்சியில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிடத் தகுதி பெற்றவுடன் 81 வயதுடைய திரு பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் திரு டிரம்ப்பை தாக்கினார்.

திரு டிரம்ப்பின் பிரசாரத்தில், “வெறுப்பு, பழிவாங்குதல் ஆகியவை தென்படுகிறது, இவை அமெரிக்கச் சிந்தனைக்கு எதிரானவை,” என்று விமர்சித்தார்.

பதிலுக்கு திரு டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் இது கொண்டாடும் நேரமல்ல என்றும் திரு பைடனைத் தோற்கடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். அமெரிக்காவின் மிக மோசமான அதிபர் என்றும் திரு பைடனை டிரம்ப் விமர்சித்தார்.

“நமது நாட்டின் எல்லைகளை நாம் மூட வேண்டும். இதுவரை காணாத வகையில் செயலாற்றப் போகிறோம், அத்துடன் அமெரிக்கப் பொருளியலை உலகின் மிகச் சிறந்த பொருளியலாக உருவாக்கப் போகிறோம்.

“எனவே நாம் இப்பொழுது கொண்டாடப் போவதில்லை. எட்டு மாதம் கழித்து, தேர்தல் முடிந்தபின் கொண்டாடலாம்,” என்று ஊடகத் தகவல்கள் அவர் தேவையான 1,215 பேராளர்களைப் பெற்றுவிட்டார் என்று கூறிய நிலையில் திரு டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்காவில் அடுத்த அதிபராக யார் வரவேண்டும் என்று நாடளாவிய கருத்துக் கணிப்புகளில் திரு டிரம்ப் என 47.3 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். ஒப்புநோக்க, திரு பைடன் அதிபராக வரவேண்டும் என 45.5 விழுக்காட்டினர் விருப்பம் தெரிவித்துள்ளதாக ‘ரியல் கிளியர் பாலிடிக்ஸ் போலிங் எவரேஜ்’ அமைப்பு கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்