கோலாலம்பூர்: மலேசியாவில் சில மணி நேரம் பிச்சை எடுப்பதன் மூலம் நாள் ஒன்றுக்கு 500 ரிங்கிட் (S$144) பெற்று வந்த பிச்சைகாரரின் உதவித்தொகையை மலேசிய அரசாங்கம் நிறுத்தியுள்ளது.
உதவித்தொகை நிறுத்தப்பட்ட அந்த பிச்சைக்காரரிடம் எஸ்யுவி வகை ஆடம்பர கார் ஒன்றும் உள்ளது.
மேலும் அவர் காலை நேரங்களில் பேருந்து நிறுவனம் ஒன்றுக்கு வேலைக்கு செல்கிறார், அதன் மூலம் அவர் மாதம் 2,000 ரிங்கிட் சம்பளமாக பெறுகிறார் என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மார்ச் மாதத்திலிருந்து அவருக்கு மாதாமாதம் வழங்கப்பட்டு வந்த 450 ரிங்கிட் உடற்குறை உதவித்தொகை நிறுத்தப்படும் என்று பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டு அமைச்சுக்கான துணையமைச்சர் நோரய்னி அகமத் நாடாளுமன்றத்தில் மார்ச் 12ஆம் தேதி உறுதிபடுத்தினார்.
பெயர் வெளியிடப்படாத அந்த நபருக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர் இனி பிச்சை எடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாகாங் மாநிலத்தின் மாரான் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஸ்ரீஜெயா இரவுச் சந்தையில் பிச்சை எடுப்பதை ஒழிக்கும் நடவடிக்கையாக பிப்ரவரி 21ஆம் தேதி சோதனையில் ஈடுபட்டபோது அந்த ஆடவர் அதிகாரிகளிடம் சிக்கினார்.
பிச்சை எடுக்க வேண்டாம் என வாய்மொழி எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள், ஆடவர் மீது நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
ஆடவரிடம் எஸ்யுவி ரகத்தைச் சேர்ந்த புரோட்டான் எக்ஸ் 70 ஆடம்பர கார் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. அந்த காரின் தற்போதைய விலை 123,800 ரிங்கிட் முதல் 128,800 ரிங்கிட் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது.
கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர், இரு கைகளிலும் உள்ள உடற்குறை காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு முதல் சமூகநலத் துறையிடம் இருந்து மாதாமாதம் 450 ரிங்கிட் நிதி உதவி பெற்று வந்தார்.