கோலாலம்பூர்: உட்லண்ட்ஸ் மற்றும் துவாஸ் சோதனைச் சாவடிகள் வழியாக காரில் சிங்கப்பூர் செல்லும் மலேசியர்கள், வரும் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) முதல் கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.
சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையத்தின் கைப்பேசிச் செயலியான MyICA மூலம் அந்தக் குறியீட்டை உருவாக்கிக்கொள்ளலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிங்கப்பூர்வாசிகள் குறியீட்டை உருவாக்கத் தேவைப்படும் தங்களது சுயவிவரங்களைப் பதிவு செய்ய சிங்பாஸை அல்லது கடவுச்சீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
மலேசியர்கள் தங்களது சுயவிவரங்களைப் பதிவுசெய்ய கடவுச்சீட்டில் இயந்திரங்கள் வாசிக்கக்கூடிய பகுதியை ‘ஸ்கேன்’ செய்ய வேண்டும் என்ற விவரம் தற்போது வெளிவந்து உள்ளது.
இந்தப் பதிவு மூலம் கியூஆர் குறியீட்டை உருவாக்கிய பின்னர் சோதனைச் சாவடியில் அந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்து சிங்கப்பூருக்குள் நுழையலாம்.
அதனால், சோதனைச் சாவடிகளில் கார்களுக்கு என உள்ள பகுதிக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கடவுச்சீட்டை காண்பிக்க வேண்டிய அவசியம் இராது.
ஒரு முறை உருவாக்கப்படும் கியூஆர் குறியீடு ஓராண்டு காலத்திற்குச் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

