தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முஸ்லிம் அல்லாதோர் ஒருவரை மட்டுமே மணந்துகொள்ளலாம்: சரவாக் அமைச்சர்

2 mins read
cd387c3e-8fb1-406d-a36a-99bd9aad800f
மணமகன் இரு மணமகள்களுடன் காணப்படும் திருமண விருந்து நிகழ்ச்சியின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன. - படம்: மலேசியா சின் சியூ நாளேடு/ஃபேஸ்புக்
multi-img1 of 3

குச்சிங்: மலேசியச் சட்டத்தின்கீழ், முஸ்லிம் அல்லாதோர் திருமணத்தின்போது ஒருவரை மட்டுமே மணந்துகொள்ளலாம் என்று சரவாக் மாநில மகளிர், பாலர்பருவ, சமூகநல மேம்பாட்டு அமைச்சர் ஃபாத்திமா அப்துல்லா கூறியிருக்கிறார்.

உள்ளூர்வாசி ஒருவர், மார்ச் 12ஆம் தேதி நடைபெற்ற திருமண விருந்து நிகழ்ச்சியில் இரு பெண்களைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கருத்துரைத்தார்.

அந்த ஆடவரும் இரு பெண்களும் உணவகம் ஒன்றில் சீனப் பாரம்பரியத் திருமண உடைகளில் காணப்படும் படங்கள் இணையத்தில் பரவின.

“சிவில் திருமணம், முஸ்லிம் திருமணம் ஆகியவை தொடர்பான சட்டங்கள் நடப்பில் உள்ளன. சரவாக்கில் பூர்வகுடிகளின் சடங்குபூர்வத் திருமண நிகழ்ச்சிகளும் நடைபெறுவதுண்டு,” என்றார் அமைச்சர்.

“மலேசியச் சட்டத்தின்கீழ், முஸ்லிம் அல்லாதோர் சிவில் அல்லது பூர்வகுடி சடங்குபூர்வத் திருமணங்களில் ஒருவரை மட்டுமே மணந்துகொள்ள முடியும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

இணையத்தில் பரவும் படங்கள் தொடர்பான நிகழ்ச்சி சட்டபூர்வத் திருமண நிகழ்ச்சி அன்று என்றும் அது விருந்து நிகழ்ச்சி மட்டுமே என்றும் தேசியப் பதிவுத்துறை தம்மிடம் தெரிவித்ததாக அமைச்சர் ஃபாத்திமா கூறினார்.

“எனது அமைச்சிற்கு அப்பாற்பட்ட விவகாரம் என்பதால் இதுகுறித்து நான் அதிகம் கருத்துரைக்க இயலாது,” என்றார் அவர்.

மணமகனுக்குக் காவல்துறை விசாரணை தொடர்பில் அழைப்பாணை அனுப்பவில்லை என்று சின் சியூ நாளேடு தெரிவித்தது.

அந்த ஆடவர் குச்சிங்கில் உணவுக்கடை நடத்துவதாகவும் அப்பெண்கள் அந்தக் கடையில் அவருடன் பணிபுரிவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அந்தத் திருமணம் குறித்துப் புகாரளிக்கப்படவில்லை என்று குச்சிங் காவல்துறைத் தலைவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்