பாலஸ்தீன நிர்வாகத்திற்கு புதிய பிரதமர்

பாலஸ்தீன நிர்வாகத்திற்கு புதிய பிரதமர்

படம்: ஏஎஃப்பி

14 Mar 2024 - 7:13 pm

2 mins read

ஜெருசலம்: பாலஸ்தீன நிர்வாகத்தின் அதிபர் மஹ்முத் அப்பாஸ், தமது நெருங்கிய பொருளியல் ஆலோசகர் முகம்மது முஸ்தஃபாவை பிரதமராக நியமிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

வரும் நாள்களில் அந்த நியமனம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதுபற்றி பாலஸ்தீன அதிகாரிகளும் ஐரோப்பிய ஒன்றிய பேராளர் ஒருவரும் கூறினர்.

அவ்வாறு திரு முஸ்தஃபாவை திரு அப்பாஸ் நியமித்தால் அது, பாலஸ்தீன அதிகாரத்துக்குப் புத்துயிரூட்டக்கூடிய சுயேச்சையான பிரதமரை நியமிக்க எடுக்கப்பட்ட அனைத்துலக முயற்சிகளை அவர் ஏற்கவில்லை என்று பொருள்படும் என்றும் அதிகாரிகளும் பகுப்பாய்வாளர்களும் கூறினர்.

பாலஸ்தீன ஆட்சி மன்றத்தின் உயர்மட்ட அதிகாரிகளுள் ஒருவர் திரு முஸ்தஃபா.

அவரை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அதிபர் ஒப்புதலை அளிப்பதற்கான இறுதிக்கட்ட ஆலோசனைகளை அரபு நாடுகளுடன் நடத்தக்கூடிய அதிகாரம் திரு அப்பாஸிடம் உள்ளது என்று பாலஸ்தீன அதிகாரிகளுள் ஒருவரும் ஐரோப்பிய ஒன்றிய பேராளரும் கூறினர்.

அந்த அதிகாரியும் பேராளரும் ஊடகத்திடம் தொடர்புகொள்ளும் அதிகாரத்தைப் பெற்றிருக்காததால் தங்களுக்குக் கிடைத்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

திரு அப்பாஸ் தமது முடிவை மாற்றக்கூடியவர் என்றும் திரு முஸ்தஃபாவை நியமிப்பதற்கான உத்தரவில் அவர் கையெழுத்திட்டால் மட்டுமே அந்த நியமனம் உறுதியாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பாலஸ்தீன அடிப்படைச் சட்டத்தின்படி, ஆட்சிமன்றத்தின் அதிபரால் நியமிக்கப்படும் பிரதமர், மூன்று வாரங்களுக்குள் அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் கூடுதலாக இரண்டு வாரங்களை எடுத்துக்கொள்ளலாம்.

பிரதமராக இருந்த முகம்மது ஷ்டாய்யே, காஸா வட்டாரத்தில் எழுந்துள்ள நிலைமைக்கு ஏற்ப புதிய அரசாங்கத்துக்கு வழிவிடும் வகையில் பிப்ரவரி மாத பிற்பகுதியில் பதவி விலகினார்.

காஸாவில் நீடிக்கும் போரை நிறுத்த மேற்கொள்ளப்படும் அனைத்துலக முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன.

பாலஸ்தீன அரசாங்கத்தில் மாற்றங்களைக் கொண்டுவர அதிபர் மஹ்முத் அப்பாசுக்கு அமெரிக்கா நெருக்குதல் அளித்து வருகிறது.

போருக்குப் பிறகு பாலஸ்தீனர்கள் வாழும் பகுதியை ஆட்சி செய்யத் தேவையான அரசியல் அமைப்பை உருவாக்கத் தொடங்குபடி அதிபர் அப்பாசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்