மலேசியாவிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு ஜூன் 1 முதல் அதிக சேவைக் கட்டணம்

மலேசியாவிலிருந்து புறப்படும் பயணிகளுக்கு ஜூன் 1 முதல் அதிக சேவைக் கட்டணம்

1 mins read
a09be539-9bdc-49d9-a63b-db5f70c9cfe5
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கோலாலம்பூர்: மலேசியாவின் விமான நிலையங்கள் வாயிலாக பயணம் செய்வோர் ஜூன் 1 முதல் அதிக சேவைக் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் இதனை அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியானதும் மலேசிய விமான நிலையங்களை நடத்தும் எம்ஏஎச்பியின் பங்குவிலை புதன்கிழமை 8.69 ரிங்கிட்டுக்கு உயர்ந்து 52 வார உச்சத்தைத் தொட்டது.

ஆயினும், கட்டண அதிகரிப்பு குறித்து சமூக ஊடகங்களில் பயணிகள் எரிச்சலை வெளிப்படுத்தியதோடு கட்டண உயர்வுக்கான காரணங்களை விளக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டனர்.

சேவைக் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பை மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்படும் எல்லாப் பயணிகளும் ஜூன் 1 முதல் 73 ரிங்கிட் (S$21) செலுத்த வேண்டும்.

தற்போது, கோலாலம்பூரில் இருந்து ஆசியான் நாடுகளுக்குச் செல்வோர் 35 ரிங்கிட்டும் ஆசியான் அல்லாத நாடுகளுக்குச் செல்வோர் 73 ரிங்கிட்டும் செலுத்த வேண்டும்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் இரண்டாம் முனையத்தில் இருந்தும் மலேசியாவின் இதர விமான நிலையங்களில் இருந்தும் வெளிநாடு செல்லும் பயணிகள் 50 ரிங்கிட் செலுத்த வேண்டும்.

புதிய அறிவிப்பின்படி, ஆசியான் நாடுகளுக்குள் பயணம் செய்வோருக்கான சேவைக் கட்டணம் 15 ரிங்கிட் உயர்கிறது. அதேநேரம் ஆசியானுக்கு வெளியே உள்ள இடங்களுக்குச் செல்வோருக்கான சேவைக் கட்டணம் 23 ரிங்கிட் குறைகிறது.

குறிப்புச் சொற்கள்