வின்செஸ்டர்: அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலங்களான இன்டியானா, கென்டக்கி, ஒஹையோ ஆகிய மாநிலங்களை சூறைக்காற்று தாக்கியது.
இதில், குறைந்தது மூவர் மரணமடைந்தனர், மேலும் பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் உள்ள இந்தியன் லேக் என்ற நீர்த்தேக்கப் பகுதியில் அந்த மூவரும் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதி கோடை காலத்தில் பலர் இன்பச் சுற்றுலாவுக்கு வரும் பகுதி என்று கூறப்படுகிறது.
மாதர் இருவர், ஒருவருக்கு வயது 81, மற்றவருக்கு வயது 70, இருவரும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வீடு ஒன்றில் இறந்து காணப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இதுபோல் 59 வயது ஆடவர் ஒருவர் ஆர்ச்சர்ட் தீவில் மார்ச் 15ஆம் தேதியன்று தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள வீட்டில் இறந்து கிடந்ததாக டாக்டர் ஜான் ஓ கோனர் என்ற மரண விசாரணை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
மூவரும் மழுங்கலான, பலம் வாய்ந்த தாக்குதலால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மரணமடைந்ததாக மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
அந்தப் பகுதியில், கொலம்பஸ் நகருக்கு கிட்டத்தட்ட 112 கிலோமீட்டர் வடமேற்கில் உள்ள இடத்தில் ஏறக்குறைய 24 பேருக்கு எலும்பு முறிவு, மற்ற காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக ஒஹையோ மாநிலத்தின் பெல்லஃபோன்டெய்ன் என்ற இடத்தில் உள்ள மேரி ருட்டன் மருத்துவமனைப் பேச்சாளர் திருவாட்டி லோரா மில்லர் கூறினார்.
இவர்களில் பாதிப் பேர் இன்னமும் அவசர சிகிச்சைப் பிரிவில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

