தென்கொரிய மருத்துவர் நெருக்கடி: மூத்த மருத்துவர்கள் பதவி விலகல்

2 mins read
4bd498da-8d97-4f44-a025-ce2c550b2f20
தென்கொரியத் தலைநகர் சோலில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு வெளியே இருக்கும் சக்கர நாற்காலிகள். - படம்: ஏஎஃப்பி

சோல்: தென்கொரியாவில் இம்மாதம் 25ஆம் தேதி முதல் பதவி விலகப்போவதாக மூத்த மருத்துவர்கள் சிலர் அறிவித்துள்ளனர்.

அந்நாட்டின் மருத்துவக் கல்வியில் மாற்றம் கொண்டுவருவதன் தொடர்பில் கிட்டத்தட்ட ஒரு மாதமாக அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த விவகாரத்தில் இளம் மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தாங்கள் பதவி விலகப்போவதாக மூத்த மருத்துவர்கள் குழு ஒன்று சனிக்கிழமையன்று (மார்ச் 16) தெரிவித்தது.

மருத்துவர் தட்டுப்பாட்டைச் சரிசெய்ய மருத்துவக் கல்வி மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தென்கொரிய அரசாங்கம் திட்டமிட்டது. அதை எதிர்த்து சென்ற மாதம் 20ஆம் தேதியன்று மருத்துவக் கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதிக நேரம் வேலை பார்த்துவிட்டு அதற்கேற்ற சம்பளம் பெறாத தங்களால் இந்த மாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாது என்பது வெளிநடப்பு செய்த மருத்துவக் கல்வி மாணவர்களின் வாதம்.

இதனால் தென்கொரியாவில் சில முக்கியமான அறுவை சிகிச்சைகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும், முழுவீச்சிலான நெருக்கடியை தென்கொரியா இதுவரை எதிர்கொள்ளவில்லை என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

நிலைமையைக் கையாளும் முயற்சியில் தாதியரும் மருத்துவர்களும் இறங்கியிருப்பதும் ராணுவ மருத்துவ உதவியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதும் அதற்கான காரணங்களில் சில.

20 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 15) சந்தித்தனர். அந்தப் பேராசிரியர்கள் பொது மருத்துவமனைகளில் மூத்த மருத்துவர்களாகவும் பணியாற்றுபவர்கள்.

16 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், இளம் மருத்துவக் கல்வி மாணவர்களுக்கு முழு ஆதரவு வழங்குவதாக அக்குழுவின் தலைவர் பாங் ஜே-சியூங் சனிக்கிழமையன்று தெரிவித்தார். ஒவ்வொரு பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த பேராசிரியர்களும் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் தங்களின் பதவி விலகல் கடிதங்களைச் சமர்ப்பிக்கப்போவதாக பாங் சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

“எனினும், பதவி விலகும் வரை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு தனிநபரும் தாங்கள் வகிக்கும் பொறுப்புகளுக்கு ஏற்றவாறு என்றையும்போல் தங்களால் முடிந்தவரை சிறப்பான முறையில் நோயாளிகளுக்குச் சிகிச்சை வழங்குவர்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்