காபூல்: தெற்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் டேங்கர் லாரியுடனும் ஒரு மோட்டார்சைக்கிளுடனும் பயணிகள் பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்; 38 பேர் காயமுற்றனர்.
ஹெல்மண்ட் மாநிலம், கிரிஷ்க் மாவட்டத்தில் ஹேராட்-கந்தஹார் நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்ததாக மாநிலத் தகவல் துறை தெரிவித்தது.
விபத்து காரணமாக வாகனங்கள் தீப்பற்றிக்கொண்டதாக ஹெல்மண்ட் ஆளுநரின் பேச்சாளர் முகம்மது காசிம் ரியாஸ் கூறினார்.
காயமுற்றவர்களில் 11 பேருக்குக் கடுமையான காயங்களும் 27 பேருக்கு லேசான காயங்களும் ஏற்பட்டன.
ஹேராட் நகரிலிருந்து தலைநகர் காபூலுக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து, மோட்டார்சைக்கிள் மீது முதலில் மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற இருவரும் உயிரிழந்ததாக ஹெல்மண்ட் போக்குவரத்து நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர் திசையில் வந்துகொண்டிருந்த எண்ணெய் டேங்கர் லாரியுடன் பேருந்து மோதியது. இதில் இரு வாகனங்களும் தீப்பற்றிக்கொண்டன.
அந்த விபத்தில் டேங்கர் லாரியில் இருந்த மூவரும் பேருந்தில் இருந்த 16 பேரும் உயிரிழந்தனர்.

