ஜெருசலம்: காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்திற்குள் தனது படையினர் நுழைந்ததாக இஸ்ரேலிய ராணுவம் திங்கட்கிழமை (மார்ச் 18) தெரிவித்தது.
ஆனால், அந்த ராணுவத்தின் தேடுதல் வேட்டை காரணமாக ஏராளமான உயிர்கள் பலியாகிவிட்டதாகவும் மருத்துவமனைக் கட்டடங்களில் ஒன்று பலத்த தீக்கிரையானதாகவும் பாலஸ்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறினர்.
தமது படையினர் மருத்துவமனை வளாகத்திற்குள் துல்லியமான நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தபோது அவர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் பதிலுக்குத் தமது படையினர் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
மேலும், அந்த மருத்துவமனையில் தமது படையினர் தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அது சொன்னது.
மூத்த ஹமாஸ் தலைவர்கள் அல்-ஷிஃபா மருத்துவமனையை தங்களது இயக்கத்திற்காகப் பயன்படுத்தி வருவதாகக் கிடைத்த உளவுத் தகவல்களைத் தொடர்ந்து தமது படை அங்கு சென்றதாக ராணுவம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இதற்கிடையே, அந்த நடவடிக்கை குறித்து காஸா சுகாதார அமைச்சு விவரித்தது. மருத்துவமனை வளாகத்தின் நுழைவாயிலில் தீப்பற்றி எரிந்ததாகவும் அதனால் எழுந்த புகை காரணமாக பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டு இருந்த பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் அமைச்சு கூறியது.
தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும் மருத்துவமனைக் கட்டடம் ஒன்றில் அறுவை சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைக்கான வார்டுகளில் நோயாளிகள் மாட்டிக்கொண்டதாகவும் அது தெரிவித்தது.
“பல மரணங்களும் பலருக்குக் காயமும் ஏற்பட்டன. தீ பலமாக எரிந்ததால் யாரையும் உயிருடன் மீட்பது இயலாத காரியமாக இருந்தது. இஸ்ரேலியப் படைகள் மீண்டும் சுகாதார நிலையங்களுக்கு எதிராகக் குற்றம் புரிந்துவிட்டன,” என்று சுகாதார அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
2023 நவம்பர் மாதம் முதல்முறையாக இதே மருத்துவமனைக்குள் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இஸ்ரேல் கடும் கண்டனத்துக்கு ஆளானது.
மருத்துவமனை அருகே பாதாளத்தில் ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டு நிலையம் இருந்ததைத் தனது ராணுவம் கண்டுபிடித்ததாக இஸ்ரேல் அப்போது கூறி இருந்தது.

