சிட்னி: சூறாவளிக் காற்று பலமாக வீசியதில் பிற பகுதிகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் வடஆஸ்திரேலியாவில் ஏறக்குறைய 700 பேர் சிக்கிக்கொண்டனர்.
நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள போரோலூலா என்னும் சிற்றூரைச் சேர்ந்த அந்தக் குடியிருப்பாளர்களை மீட்க ஆஸ்திரேலிய தற்காப்புப் படையினர் முயன்று வருகின்றனர்.
முன்னதாக, அவர்களை மீட்க விமானததை அனுப்பும் முயற்சி, கடுமையான வானிலை காரணமாக கைவிடப்பட்டது.
திங்கட்கிழமை பிற்பகலில் சூறாவளி தாக்கியதால் பாதுகாப்பான இடங்களுக்கு விரைந்து செல்லுமாறு குடியிருப்பாளர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
எச்சரிக்கை நிலை 3 என்று அறிவிக்கப்பட்ட அந்தச் சூறாவளியால் மணிக்கு 170 கி.மீ. முதல் 200 கி.மீ. வரையிலான பலத்த காற்று வீசியதுடன் பலத்த மழையும் அந்தப் பகுதியில் பெய்தது.
“தனியாக சிக்கிக்கொண்ட 700 குடியிருப்பாளர்களை மீட்க திங்கட்கிழமை (மார்ச் 18) வானிலை கைகொடுக்கவில்லை. இருப்பினும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,” என்று அவசரநிலைக்கான அமைச்சர் மரே வாட் தெரிவித்துள்ளார்.
சூறாவளியின் சீற்றம் தணிந்தபோதிலும் நாட்டின் உட்பகுதியை நோக்கி அது நகர்வதால் கனமழை தொடர்ந்து பெய்கிறது.

