இந்தியா செல்கிறார் உக்ரேன் வெளியுறவு அமைச்சர்

இந்தியா செல்கிறார் உக்ரேன் வெளியுறவு அமைச்சர்

1 mins read
8da57bf3-6c88-4136-a5b0-c800842ae052
உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: உக்ரேனிய வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா அடுத்த வாரம் இந்தியா செல்லவிருக்கிறார்.

உக்ரேன் தனது அமைதித் திட்டத்திற்கு ஆதரவு திரட்டி வரும் வேளையில் அவரது பயணம் அமைகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்ததற்குப் பிறகு உக்ரேனின் உயர்மட்ட தலைவர் ஒருவர் இந்தியா செல்வது இதுவே முதல் முறை.

இந்தியா, பாரம்பரியமாக ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளியல், தற்காப்பு உறவுகளை கொண்டுள்ளது.

இதனால் ரஷ்யாவுக்கு எதிராக கருத்துகள் தெரிவிப்பதை இந்தியா தவிர்த்து வருகிறது.

அதே சமயத்தில் ரஷ்யாவிலிருந்து சாதனை அளவாக எண்ணெய்யை இறக்குமதி செய்து அதனுடனான உறவை இந்தியா வலுப்படுத்தியது.

குலேபாவின் இந்தியப் பயணம், இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் அழைப்பின்பேரில் அமைவதாகத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக இவ்வாண்டின் தொடக்கத்தில் இருவரும் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர்.

உக்ரேனிய அதிபர் ஸெலன்ஸ்கி முன் வைத்துள்ள அமைதித் திட்டம், ரஷ்யத் துருப்புகள் உக்ரேனிலிருந்து விலகுவதை வலியுறுத்துகிறது. 1991ஆம் ஆண்டின் சோவியத்துக்குப் பிந்திய உக்ரேனின் எல்லையை நிலைநாட்ட வேண்டும், ரஷ்யா அதன் ராணுவ நடவடிக்கைகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் உக்ரேன் தெரிவிக்கிறது.

இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்துவதோடு குலேபா, இந்தியா-உக்ரேன் அரசாங்கங்ளுக்கு இடையேயான குழுவை மறுபரிசீலனை செய்யவிருக்கிறார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இரு நாடுகளின் பொருளியல், கலாசார மற்றும் தொழில்நுட்ப உறவுகளுக்கு இந்தக் குழு முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்புச் சொற்கள்