தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஆப்பிள்’ மீது வழக்கு தொடுக்கும் அமெரிக்க நீதித் துறை

2 mins read
போட்டித்தன்மை விதிகளை மீறியதால் நடவடிக்கை: புளூம்பெர்க்
3f8255d5-7f32-4843-aa5b-3fb30d785f4c
போட்டித்தன்மைச் சட்டங்களை மீறியதாகக் கூறப்படுவதன் தொடர்பில் ஆப்பிள் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித் துறை வழக்கு தொடுக்கத் தயாராகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க நீதித் துறை, ஆப்பிள் நிறுவனத்தின் மீது மார்ச் 21ஆம் தேதி வழக்கு தொடுக்கவிருப்பதாக புளூம்பெர்க் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

போட்டித்தன்மைச் சட்டங்களை அந்நிறுவனம் மீறியதாகவும் போட்டி நிறுவனங்கள் ‘ஐஃபோனின்’ மென்பொருள், வன்பொருள் அம்சங்களை அணுக முடியாமல் தடுத்ததாகவும் கூறப்படுவதை அடுத்து இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆப்பிள் மீது நீதித் துறை வழக்குத் தொடுப்பது குறித்து இரு தரப்பும் கருத்துரைக்கவில்லை என்று ராய்ட்டர்ஸ் கூறியது.

பொருள்களைத் தேட உதவும் கருவிகளைத் தயாரிக்கும் ‘டைல்’ நிறுவனம், ஐஃபோனின் உணர்கருவிகளைப் பயன்படுத்தி மேம்பட்ட கருவிகளைத் தயாரிக்கும் முயற்சியை ஆப்பிள் தடுத்துவிட்டதாகப் புகார் கூறுகிறது.

அத்தகைய ‘ஏர்டேக்’ கருவியை ஆப்பிள் விற்பனை செய்கிறது. ‘டைல்’ நிறுவனம் அதேபோன்ற கருவியை விற்கத் தொடங்கிய சில ஆண்டுகளுக்குப் பின் ஆப்பிள் அவ்வாறு விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

கடன்பற்று அட்டை விவரங்களைக் கைத்தொலைபேசியில் சேமித்து, கட்டணச் சேவைக்குப் பயன்படுத்துவதன் தொடர்பிலும் ஆப்பிள் நிறுவனம் கட்டுப்பாடு விதித்தது. அதன் ஆப்பிள் பே சேவை வாயிலாக மட்டுமே அது சாத்தியமாகும்.

‘ஐமெசேஜ்’ தகவல் சேவை ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளில் மட்டுமே செயல்படும் என்பதன் தொடர்பிலும் அந்நிறுவனம் விமர்சனத்துக்கு உள்ளானது.

தனிப்பட்ட தகவல்கள், பாதுகாப்பு ஆகியவற்றை முன்னிட்டு பயனாளர் தரவுகளையும் ஐஃபோனின் சில வன்பொருள்களையும் மூன்றாம் தரப்பினர் பயன்படுத்த, கட்டுப்பாடு விதித்திருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.

கடந்த 14 ஆண்டுகளில் அமெரிக்க நீதித் துறை ஆப்பிள் நிறுவனத்தின் மீது போட்டித்தன்மை விதிமீறலுக்காக வழக்குத் தொடுக்கவிருப்பது இது மூன்றாவது முறை. ஆனால், அது சட்டவிரோதமாக தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதாகக் குற்றம் சாட்டப்படவிருப்பது இதுவே முதல்முறை என்று புளூம்பெர்க் கூறியது.

குறிப்புச் சொற்கள்