கோலாலம்பூர்: மக்களுக்காக ஒதுக்கப்பட்ட பொது நிதியின் மூலம் மலேசியாவில் காமன்வெல்த் போட்டி நடத்துவதாக இருந்தால் அந்தப் போட்டியை நடத்த வேண்டாம் என்று அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யீயோ தெரிவித்துள்ளார்.
2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் ஏற்று நடத்தவிருந்தது. ஆனால் பெரிய அளவில் செலவுகள் வரும் என்பதால் ஆஸ்திரேலியா போட்டியை நடத்தவில்லை என்று அறிவித்தது.
அதனால் 2026 போட்டியை நடத்துவது யார் என்ற கேள்வி எழுந்தது.
மலேசியா போட்டியை ஏற்று நடத்துவதாக இருந்தால் அதற்கு 128 மில்லியன் வெள்ளி நிதி உதவி தருவதாக காமன்வெல்த் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மலேசிய நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசியா போட்டியை நடத்தக்கூடாது என்று ஒரு தரப்பும் நடத்த வேண்டும் என்று மற்றொரு தரப்பும் கருத்துகளைக் கூறிவருகின்றன.
அதிக செலவு, போட்டியை ஏற்று நடத்த போதுமான கால அவகாசம் இல்லை என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
மலேசியா இதற்கு முன்னர் 1998ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளை ஏற்று நடத்தியது.

