வாஷிங்டன்: சனிக்கிழமை (மார்ச் 23) அதிகாலையில் அமெரிக்க நாடாளுமன்றம் $1.2 டிரில்லியன் மதிப்புள்ள வரவுசெலவுத் திட்டத்தை (பட்ஜெட்) ஏற்றுக்கொண்டது. இனி அது அதிபர் ஜோ பைடனின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.
அதிபர் பைடன் மசோதாவில் கையெழுத்திட்டவுடன், பகுதி முடக்கத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அமெரிக்க அரசாங்கம் அதிலிருந்து விடுபடும்.
நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவுக்கு 74 பேர் ஆதரவளித்தனர், 24 பேர் எதிர்த்தனர்.
ஜனநாயகக் கட்சியினர் அதிகம் உள்ள செனட் சபை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தவுடன், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, நீதித்துறை, வெளியுறவுத் துறை, நிதித்துறை, உள்நாட்டு வருவாய் துறை ஆகியவற்றுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நிதி ஆதரவு வழஙகப்படும்.
ஆனால், உக்ரேன், தைவான், இஸ்ரேல் ஆகியவற்றுக்கான ராணுவத் தளவாட உதவிக்குத் தேவைப்படும் நிதி இதில் சேர்க்கப்படவில்லை. இதற்கு முன் குடியரசு கட்சியினர் அதிகம் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சபை அதற்கு ஒப்புதல் அளிக்காததால், மேற்கூறப்பட்டுள்ள நிதியாதரவு மசோதாவில் சேர்க்கப்படவில்லை.
மசோதாவில் திருத்தங்களைக் கொண்டு வருவதில் செனட் சபையினர் வெள்ளிக்கிழமை அதிக நேரம் செலவிட்டனர். வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குள் மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்ற காலக்கெடுவும் தாண்டிவிட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசாங்க அமைப்புகள் மசோதா நிறைவேற்றப்படும் வரை மூடக்கூடாது என்று வெள்ளை மாளிகை நிர்வாக அலுவலகம் அறிக்கை ஒன்று மூலம் கேட்டுக்கொண்டது. இறுதியில் செனட் சபை மசோதாவை ஏற்றுக்கொண்டது.
நாடாளுமன்றத்தில் மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டாலும் அது தொடர்பில் குறுகிய எண்ணிக்கையில் உள்ள குடியரசு கட்சியினருக்குமிடையே அதிருப்தி நிலவியது. 1,012 பக்கங்கள் கொண்ட மசோதா, $866 பில்லியன் தொகையை அமெரிக்க தற்காப்பு அமைச்சுக்கு வழங்குகிறது. அதில் அமெரிக்க ராணுவப் படையினருக்கு ஊதிய உயர்வும் அடங்கும். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அதிபர் பைடன், மசோதாவில் கையெழுத்திடுவேன் என்று கோடிக்காட்டியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
“இந்தச் சட்டம் ஓர் உண்மையான தேசிய பாதுகாப்பு மசோதா. இதிலுள்ள 70 விழுக்காட்டு தொகை தேசிய தற்காப்புக்குச் செலவிடப்படும். நமது ராணுவ தயார்நிலையையும் தொழிலியல் தளத்தையும் வலுப்படுத்தும் முதலீடுகளையும் அது ஈர்க்கும். அயராது உழைக்கும் நமது ராணுவ வீரர்களின் ஊதியத்தை உயர்த்தவும் அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளுக்கு உதவவும் மசோதா வகை செய்கிறது,” என்றார் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் சூசன் கோலின்ஸ்.
ஆனால், எதிர்த்தரப்பினர் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை மிகவும் அதிகம் என்றனர்.
“இது பொறுப்பற்ற செயல். இது பணவீக்கத்துக்கு இட்டுச் செல்லும். இது உங்கள் ஊதியத்தை நேரடியாகத் திருடுவதற்குச் சமமானது,” என்றார் குடியரசுக் கட்சியின் சார்பில் எப்போதும் எதிர்ப்பு தெரிவிக்கும் செனட்டர் ராண்ட் போல்.

