மாஸ்கோ தாக்குதல்: நால்வர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

மாஸ்கோ தாக்குதல்: நால்வர் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டு

2 mins read
b742c54c-46f6-44e2-9df7-56b1fcf7e7ba
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நான்கு ஆடவர்களும் கடுமையாகக் காயமடைந்திருந்தனர். - படம்: இணையம்

மாஸ்கோ: அண்மையில் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் உள்ள கலையரங்கத்தில் துப்பாக்கிக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதில் குறைந்தது 137 பேர் மாண்டனர், பலர் காயமடைந்தனர்.

இதற்கிடையே, இதுதொடர்பாக நான்கு ஆடவர்கள் மீது ரஷ்ய நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது.

அவர்கள் அனைவரும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகின்றனர்.

நால்வரும் தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகம் தெரிவித்தது.

இந்தத் தாக்குதலுக்கு உக்ரேன் காரணம் என்று ரஷ்யா கூறுகிறது.

ஆனால் அதற்கான ஆதாரம் எதையும் அது வெளியிடவில்லை.

ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளை உக்ரேன் மறுத்துள்ளது.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நான்கு ஆடவர்களும் கடுமையாகக் காயமடைந்திருந்தனர்.

விசாரணையின்போது அவர்களை ரஷ்ய அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

மூர்க்கத்தனமாக நடத்தப்பட்ட விசாரணையைக் காட்டும் காணொளியை ரஷ்யப் பாதுகாப்புப் படைகள் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த நால்வரில் ஒருவரின் உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதாக நம்பப்படுகிறது.

இதற்கிடையே, மாஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளபோதிலும் அதுகுறித்து ரஷ்யா சந்தேகம் தெரிவித்துள்ளது.

உக்ரேனில் சிலர் ரஷ்யாவுக்குள் துப்பாக்கிக்காரர்களை அனுப்பிவைக்க தயாராக இருந்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் கூறினார்.

இதை மறுத்த உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, மாஸ்கோ கலையரங்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உக்ரேன்தான் காரணம் என்று அதிபர் புட்டின் உலக நாடுகளை நம்பவைக்க முயற்சி செய்வதாகக் கூறினார்.

உக்ரேனைப் பாதுகாக்கவே தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு காரணம் என்று அமெரிக்கா கூறிவருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் மரியா ஸகாரோவா தெரிவித்தார்.

தாக்குதல் தொடர்பாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நால்வரையும் சேர்த்து 11 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்