காலுறையில் ‘அல்லாஹ்’ எனும் சொல்: கடை நிறுவனர், இயக்குநர் மீது குற்றச்சாட்டு

2 mins read
a1e14322-fb8d-4349-8f01-ef3eb287a2b0
பிறருடைய சமய உணர்வுகளைப் புண்படுத்தியதாக கேகே மார்ட் நிறுவனத்தின் நிறுவனர் சாய் கீ கான் மீதும் அவரது மனைவி லோ சியூ மியூ மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. - படம்: பெரித்தா ஹரியான்

கோலாலம்பூர்: அண்மையில் மலேசியாவில் உள்ள கேகே சூப்பர் மார்ட் எனும் அவசரத்துக்குத் தேவையான பொருள்களை வாங்க ஏதுவான அக்கம்பக்க கடைகளில் ‘அல்லாஹ்’ எனும் சொல் கொண்ட காலுறைகள் விற்கப்பட்டது தெரியவந்தது.

‘அல்லாஹ்’ எனும் சொல் அரபு மொழியில் இறைவனைக் குறிப்பிடுகிறது.

காலுறையில் இச்சொல் இடம்பெற்றதை அடுத்து, முஸ்லிம்கள் அதிருப்தி அடைந்தனர்.

இந்நிலையில், பிறருடைய சமய உணர்வுகளைப் புண்படுத்தியதாக கேகே மார்ட் நிறுவனத்தின் நிறுவனரான 57 வயது சாய் கீ கான் மீதும் அவரது மனைவியான 53 வயது லோ சியூ மியூ மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தங்கள்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கேகே மார்ட் நிறுவனத்தின் இயக்குநர்களான இருவரும் மறுத்து வழக்கு விசாரணை கோரியுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பலாம்.

இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, கேகே மார்ட் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருமுறை பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

மலேசியாவெங்கும் அந்நிறுனத்துக்குச் சொந்தமான 800 கடைகளில் மன்னிப்பு தெரிவிக்கும் வகையில் வாசகங்களைக் கொண்ட பதாகைகள் வைக்கப்பட்டன.

காலுறைகளை விநியோகம் செய்த ஸின் ஜியான் சாங் நிறுவனத்துக்கு எதிராக கேகே மார்ட் நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.

தனக்கு இருந்த நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததற்காக குறைந்தது 30.8 மில்லியன் ரிங்கிட் (S$8.77 மில்லியன்) இழப்பீட்டுத் தொகையை அது கோருகிறது.

இந்த சர்ச்சைக்குக் காரணமானவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மார்ச் 19ஆம் தேதியன்று மலேசிய மாமன்னர் இப்ராகிம் இஸ்கந்தர் தெரிவித்திருந்தார்.

பெட்ரோல் குண்டு வீச்சு

இதனிடையே, பேராக்கின் தாப்பாவில் உள்ள கேகே சூப்பர் மார்ட் கிளைமீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) அதிகாலை 5 மணியளவில் நிகழ்ந்தது.

ஆயினும், அக்குண்டு கடையின்முன் உள்ள ஐந்தடி அகல நடைபாதையிலேயே விழுந்துவிட்டது. அது வெடிக்கவும் இல்லை.

சம்பவம் நிகழ்ந்தபோது கடையினுள் ஊழியர்கள் சிலர் இருந்தனர்.

இதன் தொடர்பில் விசாரித்து வருவதாக தாப்பா காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்