பைடன் - நெட்டன்யாகு உறவில் விரிசல்

2 mins read
9b34f051-dc27-479e-8966-69d31a19d263
அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் மீறி ராஃபா மீது இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தாக்குதல் நடத்தினால் இஸ்‌ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவியை அமெரிக்கா குறைத்துக்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: காஸா போர் காரணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும் இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

காஸாவில் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என்றும் ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருக்கும் அனைத்துப் பிணைக்கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்றும் ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் மார்ச் 25ல் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த வாக்களிப்பில் அமெரிக்கா கலந்துகொள்ளவில்லை.

இதையடுத்து, இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உறவு மேலும் கசந்துள்ளது.

தீர்மானத்தை எதிர்த்துப் பிரதமர் நெட்டன்யாகு அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளார்.

ராஃபாவில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் கலந்துரையாட இஸ்‌ரேலிய மூத்த அதிகாரிகள் இவ்வாரம் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குப் பயணம் மேற்கொள்ளவிருந்தனர்.

இந்தப் பயணத்தைப் பிரதமர் நெட்டன்யாகு ரத்து செய்துள்ளார்.

காஸாவின் தென் பகுதியில் உள்ள ராஃபா நகரில் மில்லியன்கணக்கான பாலஸ்தீனர்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்நிலையில், அங்கு இஸ்‌ரேல் தரைவழித் தாக்குதல் நடத்தினால் உயிர்ச்சேதம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. ராஃபாவில் பெரும் உயிர்ச்சேதத்தைத் தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

ஆனால் இருநாட்டு அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடலைப் பிரதமர் நெட்டன்யாகு ரத்து செய்ததை அடுத்து, அமெரிக்கா எடுத்துவரும் இந்த முயற்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ராஃபா தாக்குதலுக்கு இஸ்‌ரேல் தயாராகும் நிலையில், அமெரிக்காவுடனான உறவில் பதற்றநிலை நிலவுகிறது.

அதிபர் பைடனையும் மீறி ராஃபா மீது திரு நெட்டன்யாகு தாக்குதல் நடத்தினால் இஸ்‌ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவியை அமெரிக்கா குறைத்துக்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருதரப்பினருக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை குறைந்து வருவதாகவும் இந்த நெருக்கடிநிலை சரியான முறையில் கையாளப்படாவிடில் அது மேலும் மோசமடையும் என்றும் மத்தியக் கிழக்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவைப் பிரதிநிதித்தவருமான டாக்டர் ஏரன் டேவிட் மில்லர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
அமெரிக்காஇஸ்‌ரேல்