தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இடிந்த பால்டிமோர் பாலம்: 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

2 mins read
மார்ச் 26ஆம் தேதி மாலை தேடல், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன
9268d302-c9f7-496f-ac66-116f6e64d63f
பால்டிமோரில் உள்ள ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் இடிந்த பகுதி டாலி கொள்கலன் கப்பலின்மேல் விழுந்துள்ளது. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ஃபிரான்சிஸ் கீ பாலம் இடிந்த சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மார்ச் 26ஆம் தேதி மாலை தேடல், மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில் அதிகாரிகள் அவ்வாறு கூறினர்.

மார்ச் 26ஆம் தேதி காலை, சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட டாலி எனும் கப்பல், மின்சாரம் இன்றி செயலிழந்ததால் அந்தப் பாலத்தின் மீது மோதியதாகக் கூறப்பட்டது.

இச்சம்பவத்தில் சிலர் ஆற்று நீரில் மூழ்கினர். சில வாகனங்களும் மூழ்கியதாகத் தெரிகிறது.

ஆறு பேரைக் காணாத நிலையில், அவர்கள் கப்பல் மோதியபோது பாலத்தில் பழுதுபார்ப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

“நீண்ட நேரம் தேடியும் அவர்களைக் காணவில்லை. ஆற்று நீரின் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டால் காணாமற்போன ஆறு பேரில் யாரையும் உயிருடன் மீட்கும் நம்பிக்கை இல்லை,” என்று கரையோரக் காவற்படை கூறியது.

முன்னதாக, படாப்ஸ்கோ ஆற்றிலிருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அவர்களில் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.

பால்டிமோர் பாலம் 1977ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அதன் மறுகட்டுமானத்திற்கான செலவை அமெரிக்க மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள விரும்புவதாக அதிபர் ஜோ பைடன் கூறினார்.

துறைமுகத்திலிருந்து வெளியேறும்போது டாலி கப்பல் கட்டுப்பாட்டை இழந்ததாக அதிலிருந்த சிப்பந்திகள் மேரிலேண்ட் அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

மோதுவதற்குச் சில கணங்கள் முன்னால் கப்பல் சிப்பந்திகள் உதவிகேட்டு விடுத்த அழைப்பினால் அதிகாரிகள் சாலைப் போக்குவரத்தை நிறுத்தினர். அதனால் பல உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததாக மேரிலேண்ட் மாநில ஆளுநர் வெஸ் மோர் கூறினார்.

டாலி கப்பலில் இருந்த 22 சிப்பந்திகளும் இந்தியர்கள் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.

அக்கப்பலைத் துறைமுகத்திலிருந்து வெளியேற்ற உதவும் ‘பைலட்’கள் இருவரில் ஒருவர் விபத்தில் காயமுற்றதாகவும் சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் அது தெரிவித்தது.

இவ்வேளையில், விபத்து குறித்தக் காணொளிகளைப் பார்வையிட்ட பொறியாளர்கள் சிலர், பால்டிமோர் பாலத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பாலத்திற்குக் ‘கால்’களைப்போல் கருதப்படும் அத்தூண்களில் ஒன்று அகற்றப்பட்டாலும் பாலம் இடிந்து விழுவதைத் தவிர்க்க முடியாது என்பதை அவர்கள் குறிப்பிட்டனர். தூண்களில் தடுப்புப் பொருள்கள் பொருத்தப்பட்டிருந்தால் பாலம் இடிந்து விழுந்ததைத் தவிர்த்திருக்கலாம் என்பது அவர்கள் கருத்து.

குறிப்புச் சொற்கள்
பாலம்உயிரிழப்புமீட்பு