ஓரினத் திருமணச் சட்டத்துக்கு தாய்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்

ஓரினத் திருமணச் சட்டத்துக்கு தாய்லாந்து நாடாளுமன்றம் ஒப்புதல்

படம்: ஏஎஃப்பி

27 Mar 2024 - 5:42 pm

1 mins read

பேங்காக்: தாய்லாந்து நாடாளுமன்றத்தின் கீழவை, திருமண சமத்துவத்துக்கு வழிவிடும் திருமண சமத்துவ மசோதாவுக்கு புதன்கிழமையன்று (மார்ச் 27) ஒப்புதல் அளித்தது.

அதனைத் தொடர்ந்து ஓரினத் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கும் முயற்சியில் தாய்லாந்து முன்னேற்றம் கண்டுள்ளது. ஆசியாவில் இதுவரை இரண்டு பகுதிகளில்தான் ஓரினத் திருமணங்களுக்குச் சட்டபூர்வ அனுமதி உள்ளது.

திருமணச் சமத்துவ மசோதாவை தாய்லாந்தின் செனட் சபையும் அந்நாட்டு மன்னரும் அங்கீகரிக்க வேண்டும். அதன் பிறகே அதைச் சட்டமாக அமல்படுத்த முடியும்.

தாய்லாந்தின் முக்கியமான அரசியல் கட்சிகள் அனைத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. நாடாளுமன்றத்தில் 415 அரசியல் தலைவர்களில் 400 பேர் அதற்குச் சாதகமாக வாக்களித்தனர்; 10 பேர் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

“சமுதாயத்தில் பாகுபாட்டைக் குறைத்து, சமத்துவத்தை உருவாக்க அனைத்து தாய்லாந்து மக்களுக்காகவும் இதை நாங்கள் செய்கிறோம்,” என்று தாய்லாந்து நாடாளுமன்றக் குழுவின் தலைவரான டானுஃபோர்ன் புன்னகந்தா அரசியல் தலைவர்களிடம் கூறினார். திருமணச் சமத்துவ மசோதா நாடாளுமன்றத்தில் வாசிக்கப்படுவதற்கு முன்பு அவர் அவ்வாறு சொன்னார்.

“வரலாறு படைக்க நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்,” என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்