ஜோகூரின் இரு நிலவழிச் சோதனைச் சாவடிகளைக் கடக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
57941b55-0b04-4bea-82fa-9dc43aa5a962
பங்குனான் சுல்தான் இஸ்கந்தர், காம்பிளக்ஸ் சுல்தான் அபு பக்கர் ஆகிய சோதனைச்சாவடிகளை நாள்தோறும் சராசரியாக 430,000லிருந்து 450,000 பேர் பயன்படுத்துவதாக ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் பஹாருதீன் தாஹிர் கூறினார். - படம்: தி ஸ்டார் நாளிதழ்

ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் சிங்கப்பூருடனான இரண்டு நிலவழிச் சோதனைச் சாவடிகளை நாள்தோறும் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பிருந்த நிலையைவிட அதிகரித்திருப்பதாக மலேசிய குடிநுழைவுத்துறை தெரிவித்துள்ளது.

பங்குனான் சுல்தான் இஸ்கந்தர், காம்பிளக்ஸ் சுல்தான் அபு பக்கர் ஆகிய சோதனைச் சாவடிகளை நாள்தோறும் சராசரியாக 430,000லிருந்து 450,000 பேர் பயன்படுத்துவதாக ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் பஹாருதீன் தாஹிர் கூறினார்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு, கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு சோதனைச் சாவடிகளைப் பயன்படுத்துவோரின் அன்றாட எண்ணிக்கை சராசரியாக 400,000ஆக இருந்தது. தற்போது அது பேரளவில் ஏற்றம் கண்டுள்ளது,” என்று மார்ச் மாதம் 27ஆம் தேதியன்று ஜோகூர் குடிநுழைவுத் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் திரு பஹாருதீன் தாஹிர் தெரிவித்தார்.

ஜோகூரில் உள்ள இரு நிலவழிச் சோதனைச் சாவடிகள் இயங்கும் முறை குறித்து கலந்துரையாட அம்மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி, உயர் அதிகாரிகள் ஆகியோரை ஜோகூர் பட்டத்து இளவரசர் இஸ்மாயில் இப்ராகிம் மார்ச் 26ல் சந்தித்தார்.

இதுகுறித்து திரு பஹாருதீன் தாஹிரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ஜோகூரின் இரு நிலவழிச் சோதனைச் சாவடிகள் உலகிலேயே ஆக அதிகமானோர் பயன்படுத்தும் சோதனைச் சாவடிகளில் அடங்கும் என்றும் அந்தச் சோதனைச்சாவடிகள் இயங்கும் முறை குறித்து பட்டத்து இளவரசர் அக்கறை தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இரு நிலவழிச் சோதனைச் சாவடிகளிலும் நிலவும் போக்குவரத்து தொடர்பான சவால்களுக்குத் தீர்வு காண மிகச் சிறந்த அணுகுமுறையை முன்வைக்கும்படி தமது குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக திரு பஹாருதீன் தாஹிர் கூறினார்.

இந்த இரு நிலவழிச் சோதனைச் சாவடிகளும் மலேசியப் பொருளியலின் வளரச்சிக்குப் பங்களிப்பதாக அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்