கோலாலம்பூர்: ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் எனச் சந்தேகிக்கப்படும் ஐந்து பேருக்கும் மலேசியக் காவல்துறையினருக்கும் இடையே மார்ச் 29ஆம் தேதி இரவு துப்பாக்கிச் சூடு நிகழ்ந்தது.
இதில் அந்த ஐந்து பேரையும் மலேசியக் காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் சிலாங்கூர் மாநிலத்தின் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் நிகழ்ந்தது.
வாகனம் ஒன்று சந்தேகத்துக்குரிய வகையில் செல்வதை காவல்துறை அதிகாரிகள் கவனித்ததாகவும் அதைச் சோதனையிடும் நோக்குடன் வாகனத்தை நிறுத்தும்படி ஓட்டுநருக்கு உத்தரவிட்டதாகவும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் உசேன் உமர் கான் தெரிவித்தார்.
ஆனால் காவல்துறை அதிகாரிகளை அந்த சந்தேக நபர்கள் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. வாகனத்தை அவர்கள் வேகமாகச் செலுத்தி காவல்துறை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையின் வாகனம் மீது சந்தேக நபர்களின் வாகனம் மோதியதாகவும் அதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. 2022 முதல் செயல்படத் தொடங்கிய அவர்கள் சிலாங்கூர், கோலாலம்பூர் முழுவதும் 50 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படுகிறது.
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தலா ஏழு முதல் 16 வழக்குகள் வரையிலான கடந்தகால குற்றப் பின்னணியைக் கொண்டவர்கள் என்று சிலாங்கூர் காவல் துறைத் தலைவர் ஹுசைன் ஓமர் கான் கூறியுள்ளார்.
சம்பந்தப்பட்ட கும்பல் தொழிற்சாலை, அலுவலக வளாகங்களை குறிவைத்து கொள்ளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக பாதுகாப்புப் பெட்டி வைத்திருக்கும் தளவாட நிறுவனங்களை குறிவைத்தும் குடியிருப்பு வீடுகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்தியதாக அவர் கூறினார்.

