தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆயுதங்களுடன் ‘இஸ்‌ரேலிய ஒற்றர்’; கைது செய்தது மலேசியா

2 mins read
a7529cea-15a8-44a6-bdea-82d2eff972cf
கைது செய்யப்பட்டவரிடம் ஆறு துப்பாக்கிகளும் 200 தோட்டாக்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது - படம்: இணையம்

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆயுதங்களுடன் இருந்த ஆடவர் ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அந்த 36 வயது ஆடவர் இஸ்‌ரேலுக்காக வேவு பார்ப்பவராக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அவர் மார்ச்12ல் ஐக்கிய அரபு சிற்றரசுகளிலிருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவுக்குள் நுழைய அவர் போலி பிரெஞ்சுக் கடப்பிதழ் பயன்படுத்தியிருக்கக்கூடும் என்று மலேசிய அதிகாரிகள் நம்புகின்றனர்.

சந்தேக நபரிடம் ஆறு துப்பாக்கிகளும் 200 தோட்டாக்களும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

மலேசியக் காவல்துறையினர் அந்த ஆடவரிடம் விசாரணை நடத்தியதை அடுத்து அவர் தமது இஸ்‌ரேலியக் கடப்பிதழைக் காட்டியதாக மலேசிய காவல்துறையின் தலைமை ஆய்வாளர் ரஸாருதீன் உசேன் கூறினார்.

கைது செய்யப்பட்டவர் இஸ்‌ரேலிய உளவுத்துறையைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும் என்றும் நம்பப்படுகிறது.

குடும்பத் தகராறு காரணமாக இஸ்‌ரேலிய நாட்டவர் ஒருவரைத் தேடிக் கண்டுபிடிக்க தாம் மலேசியாவுக்கு வந்ததாக சந்தேக நபர் தெரிவித்திருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

ஆனால் அந்த ஆடவர் கூறியது நம்பக்கூடியதாக இல்லை என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேறு ஒரு நோக்கத்துடன் அவர் மலேசியாவுக்கு வந்திருக்கக்கூடும் என்றும் மலேசியாவில் அவருக்கு பிறரிடமிருந்து உதவி கிடைத்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மலேசியாவில் அவர் பல ஹோட்டல்களில் தங்கியதாகத் தெரியவந்துள்ளது.

மூவர் கைது

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட இஸ்‌ரேலிய ஆடவருக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும் ஓட்டுநராக இருந்ததாகவும் சந்தேகிக்கப்படும் மூவரை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த மூவரில் திருமணமான தம்பியரும் அடங்குவர்.

அந்தத் தம்பதியருக்குச் சொந்தமான காரில் இருந்த துப்பாக்கியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், மலேசியா உயர் விழிப்புநிலையில் உள்ளது.

மலேசிய மாமன்னர், பிரதமர் அன்வார் இப்ராகிம் ஆகியோர் உட்பட மற்ற தலைவர்களைப் பாதுகாக்கும் பணிகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து சிங்கப்பூரில் உள்ள இஸ்‌ரேலியத் தூதரகம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

மலேசியாவுக்கும் இஸ்‌ரேலுக்கும் இடையே அரசதந்திர உறவு இல்லை.

மலேசியாவின் மக்கள்தொகையில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள்.

நீண்டகாலமாகவே மலேசியா பாலஸ்தீனர்களை ஆதரித்து அவர்களுக்குக் குரல் கொடுத்து வருகிறது.

காஸா போரில் இஸ்‌ரேலின் செயல்பாடுகளுக்கு அது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் ஏறத்தாழ 600 பாலஸ்தீன அகதிகள் இருப்பதாக ஐக்கிய நாட்டு அகதிகள் பிரிவு தெரிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டில் மலேசியாவில் பாலஸ்தீன விஞ்ஞானி ஒருவரை அடையாளம் தெரியாத இரு ஆடவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

அந்தத் தாக்குதலை இஸ்‌ரேலின் உளவுத்துறை நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு கூறியது. அந்தக் குற்றச்சாட்டை இஸ்‌ரேல் மறுத்தது.

குறிப்புச் சொற்கள்
மலேசியாஇஸ்‌ரேல்உளவு