வாஷிங்டன்: டாட்டா கன்சல்ட்டன்சி சர்விசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் தங்களை வேலையிலிருந்து நீக்கி அந்தப் பணிகளை எச்1-பி விசா வைத்திருக்கும் இந்திய ஊழியர்களுக்குத் தந்துவிட்டதாக அனுபவம்வாய்ந்த அமெரிக்க நிபணர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தத் தகவலை அமெரிக்காவின் ‘வால் ஸ்திரீட் ஜர்னல்’ நாளிதழ் மார்ச் 29ல் வெளியிட்டது.
இனம், வயது அடிப்படையில் தங்களுக்கு எதிராக டிசிஎஸ் நிறுவனம் பாரபட்சத்துடன் நடந்துகொண்டதாக அந்த அமெரிக்க ஊழியர்கள் குறைகூறினர்.
தங்களுக்குப் பதிலாக குறைந்த சம்பளத்துடன் தற்காலிக வேலை விசா வைத்திருக்கும் இந்திய நாட்டவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.
2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இதுகுறித்து குறைந்தது 22 ஊழியர்கள் அமெரிக்காவின் வேலை வாய்ப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து இந்தியாவின் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி நிறுவனம் டிசிஎஸ் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியது.
அதற்குப் பதிலளித்த டிசிஎஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், “டிசிஎஸ் நிறுவனம் சட்டவிரோதமாக, பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை. அமெரிக்காவில் நியாயமான வகையில் ஊழியர்களைப் பணியமர்த்தும் நற்பெயர் எங்களுக்கு உள்ளது. எங்கள் செயல்பாடுகள் உயர்தர நாணயம், நெறிமுறைகளைக் கொண்டவை,” எனக் கூறினார்.