கோலாலம்பூர்: மலேசியாவின் பாகாங் மாநிலம், குவாந்தான் மாவட்டத்தில் உள்ள ‘கேகே சூப்பர்மார்ட்’ பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் சனிக்கிழமை பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.
பேராக் மாநிலத்தில் உள்ள வேறொரு கேகே சூப்பர்மார்ட் கடைக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ந்த இரண்டாவது சம்பவம் இது.
சனிக்கிழமை நடந்த தாக்குதலில் சந்தேக நபரைக் காவல்துறை இன்னமும் அடையாளம் காணவில்லை. ஆனால், தடயங்களைத் தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக குவாந்தான் காவல்துறைத் தலைவர் வான் முகம்மது ஸகாரி வான் பூசு ராய்ட்டர்சிடம் கூறினார்.
‘அல்லாஹ்’ என்ற சொல்லில் அச்சிடப்பட்ட காலுறைகளை விற்றதற்காக, சமய உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து சனிக்கிழமை இத்தாக்குதல் நடந்தது. இதற்கிடையே, நிலைமை மோசமடைவதற்கு முன்னர் பிரதமர் அன்வாரும் உள்துறை அமைச்சர் சைஃபுடினும் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று பிகேஆர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரீம் கேட்டுக்கொண்டுள்ளார்.

