அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட பலர்; பெண் ஒருவர் மரணம்

அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட பலர்; பெண் ஒருவர் மரணம்

1 mins read
71137aa5-0438-4587-b0bb-a539884d7663
இரு பெண்கள் கோல்டு கோஸ்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. - படம்: கூகல் மேப்ஸ்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஹோட்டலில் பலர் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் பெண் ஒருவர் மரணமடைந்தார், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் மார்ச் மாதம் 29ஆம் தேதியன்று நிகழ்ந்தது.

கோல்டு கோஸ்ட் நகரில் உள்ள கடற்கரைக் குடியிருப்பில் உள்ள ஹோட்டலில் பலர் அளவுக்கு மீறி போதைப்பொருள் உட்கொண்டதாக ஆஸ்திரேலிய நேரப்படி இரவு 11 மணிக்குத் தகவல் கிடைத்ததும் அவசர சேவை அதிகாரிகள் அவ்விடத்துக்கு விரைந்தனர்.

மொத்தம் ஏழு பேர் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். அவர்கள் அனைவருக்கும் 43 வயது என்று ஆஸ்திரேலிய ஊடகம் தெரிவித்தது.

“அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட பெண்ணுக்கு இதயச் செயலிழப்பு ஏற்பட்டது. அவரைக் காப்பாற்ற மருத்துவ அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அப்பெண்ணைக் காப்பாற்ற முடியாமல் போனது. அவர் சுயநினைவு திரும்பாமலேயே மரணம் அடைந்தார்,” என்று குவீன்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவையின் மூத்த செயல்முறை மேற்பார்வையாளர் மிட்சல் வேர் மார்ச் 30ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இரண்டு பெண்கள் கோல்டு கோஸ்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

மற்ற நால்வருக்கும் மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அவர்களுக்குக் கூடுதல் சிகிச்சை தேவையில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்