கார் குண்டுவெடிப்பில் 7 பேர் மரணம்

கார் குண்டுவெடிப்பில் 7 பேர் மரணம்

1 mins read
43928ace-d136-46bb-9b06-68d083e00db8
சித்திரிப்பு: - பிக்சாபே

அம்மான்: சிரியாவின் அசாஸ் நகரில் சனிக்கிழமை (மார்ச் 30) இரவு, பரபரப்பான சந்தையில் நடந்த கார் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஏழு பேர் மாண்டனர்.

சம்பவத்தில் மேலும் 30 பேர் காயமடைந்ததாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது.

ரமலான் மாதத்தில் நோன்பு துறப்புக்குப்பின் கடைகளில் பொருள்களை வாங்க மக்கள் குவிந்திருந்த நேரத்தில் அந்த கார் வெடித்ததாகக் கூறப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்றுக்கொள்ளவில்லை.

துருக்கிய எல்லையில் அமைந்துள்ள அசாஸ் நகரில் அரேபியர்கள் அதிகம் வசிக்கின்றனர். துருக்கிய ஆதரவு பெற்ற சிரியா கிளர்ச்சிக் குழுவினரின் கட்டுப்பாட்டில் உள்ள அந்நகரில் ஈராண்டுக்குமுன் கார் குண்டுவெடிப்பு நடந்தது. அதன் பின்னர் அங்கு பொதுவாக அமைதி நிலவியது.

நாட்டின் வடமேற்கு எல்லையில் உள்ள முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளில் இத்தகைய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அடிக்கடி நடப்பதைக் கவனிப்பாளர்கள் சுட்டினர்.

காயமடைந்த 30 பேரில் சிலருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டதாகவும் உள்ளூர் மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுவருவதாகவும் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.

நீண்டகாலமாகவே, குர்தியத் தலைமையிலான ‘ஒய்பிஜி’ படையினர் இத்தகைய தாக்குதல்களை நடத்துவதாகக் குடியிருப்பாளர்கள் கருதும் வேளையில் சிரியா அதிபர் பஷார் அல் ஆஸாத்துக்கு விசுவாசமான குழுக்களையும் சிலர் குறைகூறுகின்றனர். ‘ஒய்பிஜி’ அத்தகைய கூற்றுகளை நிராகரித்துவருகிறது.

குறிப்புச் சொற்கள்