நியூசிலாந்து கார் விபத்தில் மலேசிய மாணவர்கள் இருவர் மரணம்

நியூசிலாந்து கார் விபத்தில் மலேசிய மாணவர்கள் இருவர் மரணம்

2 mins read
b65d777d-166f-4871-957e-124e9efc9499
சித்திரிப்பு: - பிக்சாபே
Google News Preferred Icon

பெட்டாலிங் ஜெயா: நியூசிலாந்தில் மார்ச் மாதம் 30ஆம் தேதி கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் மலேசிய மாணவர்கள் இருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேக் தெகபோ நகருக்கு அருகே நடந்த விபத்தில் பலியான மாணவர்களின் குடும்பங்களுக்கு மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில் காயமடைந்த மாணவர்கள் விரைவில் நலம்பெற வேண்டுவதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்தில் உள்ள மலேசியத் தூதரகத்தின் மூலம், பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

மார்ச் மாதம் 30ஆம் தேதி, பலியான மாணவர்களில் ஒருவரான வான் நூர் அட்லினா அலிசா வான் ஸைனல் அடிலீன் தனது முன்னாள் மாணவர் என்று குறிப்பிட்ட கொலெஜ் யயாசான் சாட் மலாக்கா, அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் இரங்கலைப் பதிவிட்டது.

மலேசியப் பொதுச்சேவைத் துறை மார்ச் 31ஆம் தேதி, பலியான மற்றொரு மாணவர் மேகத் அஷ்மான் அகிஃப் மேகத் இர்மான் ஜெஃப்னி தங்களது உபகாரச் சம்பளம் பெற்றவர் என்று குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் இரங்கல் தெரிவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மேலும் மூன்று மாணவர்கள் ஹெலிகாப்டர் மூலம் கிரைஸ்ட்சர்ச் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக மலேசிய வெளியுறவுத் துறை கூறியது.

உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.45 மணியளவில் லேக் தெகபோவிற்கு அருகே விபத்து நடந்ததாக அது உறுதிப்படுத்தியது. அந்த இடம், நியூசிலாந்துத் தலைநகர் வெலிங்டனிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்குத் தூதரக உதவி வழங்குவதிலும் அவர்களின் நலனைப் பாதுகாப்பதிலும் வெலிங்டனில் உள்ள மலேசியத் தூதரகமும் கிரைஸ்ட்சர்ச் நகரிலுள்ள மலேசியர்களும் இணைந்து செயல்படுவதாக அமைச்சு சொன்னது.

விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு அது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்
நியூசிலாந்துமலேசியாமாணவர்கள்கார்சாலை விபத்து