$142,000 இருந்த கைப்பெட்டியின் உரிமையாளர் காவல்துறையிடம் முன்னிலை

$142,000 இருந்த கைப்பெட்டியின் உரிமையாளர் காவல்துறையிடம் முன்னிலை

1 mins read
3fc3c410-81ea-4ea5-a585-5cf9b3be8774
கைப்பெட்டி கண்டெடுக்கப்பட்டபோது பாதுகாவலர் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசேன் உமர் கான் (நடுவில்) தெரிவித்தார். - படம்: சின் சியூ டெய்லி

பெட்டாலிங் ஜெயா: கைப்பெட்டியில் 500,000 மலேசிய ரிங்கிட்டுக்கு மேல் (S$142,000) வைத்திருந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் காவல்துறையிடம் முன்னிலையானார்.

பெட்டாலிங் ஜெயா காவல்துறை அதிகாரி உதவி ஆணையர் ஷஹ்ருல்நிஸாம் ஜாஃபர் இஸ்மாயில் இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தினார்.

“ஆமாம், நேற்று மாலை 4.30 மணிக்கு அவர் வாக்குமூலம் அளித்தார். எனினும், இன்னும் கூடுதல் வாக்குமூலங்களையும் சான்றுகளையும் பெற வேண்டியுள்ளது,” என்றார் அவர்.

முன்னதாக, அந்தக் கைப்பெட்டியைப் பெற்றுக்கொள்ள நிறுவனம் ஒன்று முன்வந்ததாகவும் ஷா ஆலமில் காவல்துறையிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது என்றும் சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் ஹுசேன் உமர் கான் தெரிவித்தார்.

எனினும், அழைப்பாணை விடுக்கப்பட்டபோது அந்த நிறுவனத்தின் இயக்குநர் தமன்சாரா காவல் நிலையத்தில் முன்னிலையாகத் தவறினார்.

அந்தக் கைப்பெட்டிக்குச் சொந்தக்காரர் தாம்தான் என்பதை நிரூபிக்கவும் அவரிடமிருந்து வாக்குமூலம் பெறவும் அந்த இயக்குநர் காவல் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என்று ஆணையர் ஹுசேன் கூறினார்.

மார்ச் 20ஆம் தேதி, கட்டுக்கட்டாக பணம் இருந்த கைப்பெட்டியைக் கடைத்தொகுதியின் கார் நிறுத்துமிடத்தில் பாதுகாவலர் ஒருவர் கண்டெடுத்தார்.

அந்தக் கைப்பெட்டி தமது வாகனத்தில் வைக்கப்படாததை தாம் கவனிக்கவில்லை என்று அதன் உரிமையாளராகக் கூறப்படுபவர் சொன்னதாக திரு ஹுசேன் கூறினார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கடனாகப் பெற்ற பணத்தை தம் நண்பர் தம்மிடம் திரும்பத் தந்ததாக அந்த உரிமையாளர் சொன்னார்.

முதலில் ரொக்கத்தை எப்படி பெற்றார் உட்பட அவரிடமிருந்து கூடுதல் வாக்குமூலங்கள் தேவைப்படுவதாக திரு ஹுசேன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்