தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நெடுஞ்சாலை இடிந்ததில் 2,000 வாகனங்கள் சிக்கித் தவிப்பு

2 mins read
944a66fc-bb6a-4122-ac85-2a2395ccb4dd
லைம் கிரீக்கிலிருந்து வடக்கே செல்லும் சாலைப் பகுதியும் லைம்கில்னிலிருந்து தெற்கே செல்லும் சாலைப் பகுதியும் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். - படம்: நியூயார்க் டைம்ஸ்

கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட கடும் புயல், நிலச்சரிவு ஆகியவற்றால், பிக் சுர் வட்டாரத்தில் அமைந்திருக்கும் நெடுஞ்சாலை 1ன் ஒரு பகுதி மார்ச் 30ஆம் தேதி இடிந்து சேதமடைந்தது.

இதனால் இரவு நேரத்தில் ஏறக்குறைய 2,000 வாகனமோட்டிகள் போக்குவரத்துத் தடையால் சிக்கித் தவிக்க நேரிட்டது.

பாதிக்கப்பட்ட இடத்தில் ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கலிஃபோர்னியா போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

லைம் கிரீக்கிலிருந்து வடக்கே செல்லும் சாலைப் பகுதியும் லைம்கில்னிலிருந்து தெற்கே செல்லும் சாலைப் பகுதியும் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் யாரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.

நெடுஞ்சாலை எப்போது மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மக்களை வெளியேற்ற, மார்ச் 31ஆம் தேதி பிற்பகலில் காவல்துறையினர் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

போக்குவரத்துத் தடையால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் ஈஸ்டர் விடுமுறைக்காக அந்த வட்டாரத்துக்கு காரில் சென்றவர்கள் எனத் தெரிகிறது. அவர்களை மீட்கும் பணி ஏப்ரல் 1ஆம் தேதியும் தொடருமென அதிகாரிகள் கூறினர்.

பாதிக்கப்பட்டோரில் பலர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். சிலர் உள்ளூர் ஹோட்டல்களை நாடிய வேளையில் மேலும் சிலர் தங்கள் கார்களிலேயே உறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டோரைப் பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் நெருக்கடிநேர ஊழியர்களும் வாகனங்களும் எளிதில் சென்றுவர உதவும் வகையில், அந்த நெடுஞ்சாலைக்கு யாரும் செல்லவேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பசிபிக் கோஸ்ட் வட்டாரத்தின் தென்மேற்குப் பகுதியில் கடந்த வாரயிறுதியில் கடுமையான புயல் தாக்கியதால் பலத்த மழை பெய்தது. திடீர் வெள்ளம் ஏற்பட்டதுடன் கலிஃபோர்னியாவின் சில பகுதிகளில் பனிப் பொழிவும் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்