டமாஸ்கஸ்: இஸ்ரேலியப் போர் விமானங்கள் ஏப்ரல் 1ஆம் தேதியன்று நடத்திய தாக்குதலில் சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள கட்டடம் ஒன்று தகர்ந்தது.
அந்தக் கட்டடம் ஈரானியத் தூதரகத்துக்கு அருகில் இருந்தது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரான் ரகசியமாக மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணித்து ஈரானிய உயர் ராணுவ அதிகாரிகள் அந்தக் கட்டடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
கட்டடம் தரைமட்டமானதில் குறைந்தது மூன்று ஈரானிய மூத்த ராணுவத் தளபதிகளும் நான்கு அதிகாரிகளும் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலியப் போர் விமானங்கள் டமாஸ்கசில் உள்ள அந்தக் கட்டடத்தைத் தகர்த்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதி செய்தனர்.
தகர்க்கப்பட்ட கட்டடம் அரசதந்திரப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும் அதைத் தகர்த்ததன் மூலம் அனைத்துலகச் சட்டங்களை இஸ்ரேல் மீறியிருப்பதாகவும் ஈரானுக்கான சிரியாவின் தூதர் ஷஃபிக் டயோப் குறைகூறியுள்ளார்.

