38 வயது ஷலோம் அவிட்டானிடம் இருந்த துப்பாக்கிகளும் தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த ஆயுங்களை அவர் மலேசியத் தம்பதியரிடம் 10,000 ரிங்கிட் (S$2,104.82) கொடுத்து வாங்கியதாக நம்பப்படுகிறது. அந்தத் துப்பாக்கிகள் தாய்லாந்திலிருந்து மலேசியாவுக்குள் கடத்தப்பட்டதாக மலேசியக் காவல்துறை தெரிவித்தது.
ஆயுதங்கள் தொடர்பான சட்டத்தின்கீழ் அவிட்டான், தம்பதியர் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
அவிட்டான் ஏப்ரல் 7ஆம் தேதி வரையிலும் அந்தத் தம்பதியர் ஏப்ரல் 5ஆம் தேதி வரையிலும் விசாரணைக் காவலில் வைக்கப்படுவர் என்று மலேசியக் காவல்துறையின் தலைமை ஆய்வாளர் ரஸாருதீன் உசேன் தெரிவித்தார்,
அவிட்டானின் ஓட்டுநராகச் செயல்பட்ட மலேசிய ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதங்கள் வைத்திருந்த குற்றத்துக்காக அவிட்டானுக்கும் அந்தத் தம்பதியருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுத் தூக்கிலிடப்படலாம் என்று திரு ரஸாருதீன் கூறினார்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள அவிட்டானுக்கும் இஸ்ரேலிய சட்டவிரோத கும்பல் ஒன்றுக்கும் தொடர்பு இருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும் அதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் திரு ரஸாரதீன் ஏப்ரல் 2ஆம் தேதியன்று தெரிவித்தார்.
மலேசியாவில் கைது செய்யப்பட்ட அவிட்டான் இஸ்ரேலிய சட்டவிரோத கும்பலைச் சேர்ந்தவர் என்றும் தமது எதிரி ஒருவரைக் கொல்ல அவர் திட்டமிட்டுக்கொண்டிருந்ததாகவும் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் நாளிதழ் மார்ச் 30ல் செய்தி வெளியிட்டது.

