தென்கிழக்கு ஆசிய நாடுகளின் விருப்பத்திற்குரிய வல்லரசு அமெரிக்கா என்பதைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறி உள்ளது சீனா.
அமெரிக்கா, சீனா என்னும் இரு வல்லரசுகளில் ஒன்றை தேர்ந்து எடுக்க வேண்டியது வந்தால் தென்கிழக்கு ஆசிய (ஆசியான்) நாடுகள் சீனாவை நோக்கியே கைகாட்டுவதாக ஆய்வு ஒன்று கண்டறிந்து உள்ளது.
‘யூசோப் இஷாக் ஆராய்ச்சிக் கழகத்தின் தென்கிழக்கு ஆசிய கள ஆய்வு 2024’ என்னும் அந்த ஆய்வின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) வெளியிடப்பட்டன.
கடந்த நான்கு ஆய்வுகளில் அமெரிக்கா பக்கம் சாய்ந்த தென்கிழக்கு ஆசிய வட்டார நாடுகள் இம்முறை சீனாவை விரும்புவதையும் அந்த நாடுகளின் மனப்போக்கில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையும் ஆய்வு கண்டறிந்தது.
இவ்வாண்டு ஜனவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி 23ஆம் தேதி வரை இணையம் வாயிலாக கருத்துகள் திரட்டப்பட்டன.
10 ஆசியான் நாடுகளில் 1,994 பேரிடம் கேட்கப்பட்டதில் 50.5 விழுக்காட்டினர் தங்களது விருப்பத்திற்குரிய வல்லரசாக சீனாவைக் குறிப்பிட்டனர். அமெரிக்காவுக்கு எஞ்சிய வாக்குகள் (49.5%) கிடைத்தன.
ஒரு விழுக்காடு வித்தியாசத்தில் அவர்களின் விருப்பம் திசைமாறி உள்ளது.
2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 61.1 விழுக்காட்டினர் அமெரிக்காவையும் 38.9 விழுக்காட்டினர் சீனாவையும் தேர்ந்து எடுத்திருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சிக் குழுவினர், வர்த்தகர்கள், மக்கள் அமைப்புகள், ஊடகங்கள், வட்டார மற்றும் அனைத்துலக அமைப்புகள் மற்றும் அரசாங்கப் பிரதிநிதிகள் முதலானோர் ஆய்வில் பங்கேற்று கருத்து தெரிவித்தனர்.
பங்கேற்பாளர்கள் இம்முறை அதிகம் வடிகட்டப்பட்டனர்.
நாட்டுரிமை, வயது, கல்வி, ஆசியானைப் பற்றிய பொது அறிவு, நடப்பு விவகாரம் மீதான ஆர்வம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
ஆங்கிலம், பஹாசா இந்தோனீசியா, கெமர், தாய் மற்றும் வியட்னாமிய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் பதில் அளிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

