தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தைவான் நிலநடுக்கம்: சுரங்கப் பணியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

2 mins read
ed3c5ea0-fc0c-4193-adfd-d9e286d3866b
இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்போரைத் தேடி மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. - படம்: ஏஎஃப்பி
multi-img1 of 4

ஹுவாலியென்: தைவானை ரிக்டர் அளவில் 7.4ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏப்ரல் 3ஆம் தேதியன்று உலுக்கியது.

இதில் ஒன்பது பேர் மாண்டனர். காயமடைந்தோரின் எண்ணிக்கை 1,058ஆக அதிகரித்திருப்பதாக தைவானியத் தீயணைப்புத்துறை தெரிவித்தது.

நிலநடுக்கம் ஏற்பட்டபோது தலைநகர் தைப்பேயில் கட்டடங்கள் ஆட்டங்கண்டன. ஆனால் அங்கு ஏற்பட்ட சேதங்களும் இடையூறுகளும் மோசமாக இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

ஆகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஹுவாலியென் நகரில் உள்ள கட்டடங்களில் சிக்கித் தவித்த அனைவரையும் மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், நிலநடுக்கத்துக்குப் பிறகு ஏற்பட்ட 300க்கும் அதிகமான அதிர்வுகள் அங்குள்ள மக்களைப் பீதியடையச் செய்தது. அந்நகர மக்கள் இரவு முழுவதும் வெளிப்புறங்களில் இருந்தனர்.

“நிலநடுக்கத்துக்குப் பிறகு ஏற்பட்ட அதிர்வுகள் பயங்கரமாக இருந்தன. இடைவிடாத அதிர்வுகள் காரணமாக வீட்டிற்குள் செல்ல பயமாக இருக்கிறது,” என்று 52 வயது திருவாட்டி யு கூறினார்.

இந்நிலையில், சுரங்கப் பணிகள் நடைபெறும் இடத்தில் சிக்கித் தவித்த சுரங்கப் பணியாளர்கள் அறுவரை ஹெலிகாப்டரில் சென்ற மீட்புப் பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.

தைவானில் உள்ள தேசிய பூங்காவில் உள்ள ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்த ஏறத்தாழ 50 ஹோட்டல் ஊழியர்களைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேடுதல் பணிகளில் ஆளில்லா வானூர்திகளும் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

இதனிடையே, மீட்கப்பட்டோரில் சிங்கப்பூரர்கள் எட்டுப் பேர் உட்பட வெளிநாட்டினர் 71 பேர் அடங்குவர் என்று தைவானிய வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

ஆயினும், கனடியர் ஒருவரையும் ஆஸ்திரேலியர் இருவரையும் காணவில்லை என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி வியாழக்கிழமை (ஏப்ரல் 4) பிற்பகல் 3.15 மணி நிலரப்படி அவர்களை அதிகாரிகள் கண்டுபிடித்துவிட்டதாகச் செய்தி வெளியானது.

இதற்கிடையே, நிலநடுக்கம் காரணமாக தேசிய பூங்காவுக்குச் செல்லப் பயன்படுத்தப்படும் சாலை சேதமடைந்திருப்பதால் அங்குள்ள ஹோட்டல்களிலிருந்து வெளியே வர முடியாமல் ஏறத்தாழ 646 பேர் சிக்கித் தவிப்பதாக அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்