மலேசியா-இந்தோனீசியா உறவை வலுப்படுத்துவது குறித்து அன்வார், பிரபோவோ கலந்துரையாடல்

2 mins read
c2045aba-93c8-4304-be93-0c0526739635
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமைச் சந்தித்துப் பேசிய திரு பிரபோவோ சுபியாந்தோ. - படம்: மலேசிய ஊடகம்

புத்ராஜெயா: அண்மையில் நடந்து முடிந்த இந்தோனீசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிரபோவோ சுபியாந்தோ, மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமை ஏப்ரல் 4ஆம் தேதி காலை 9 மணி அளவில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு திரு அன்வாரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தோனீசியப் பேராளர் குழுவுடன் திரு பிரபோவோ மலேசியாவுக்கு ஒரு நாள் சிறப்புப் பயணம் மேற்கொண்டார்.

மலேசியாவுக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து திரு அன்வாரும் திரு பிரபோவோவும் கலந்துரையாடினர்.

இருவரும் தங்கள் அரசியல் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டதாக திரு அன்வார் தெரிவித்தார்.

“எங்கள் இருவரது அரசியல் வாழ்க்கைப் பாதைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. தலைமைப் பதவியை எட்டுவதற்கு முன்பு இருவரும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம். கோலாலம்பூரில் உள்ள விக்டோரியா பள்ளியில் பயின்றபோது தமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பற்றி திரு பிரபோவோ என்னிடம் பகிர்ந்துகொண்டார்,” என்று பிரதமர் அன்வார் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்தோனீசியாவின் எட்டாவது அதிபராகப் பதவி ஏற்க இருக்கும் திரு பிரபோவோவுக்குப் பிரதமர் அன்வார் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

மலேசியாவும் இந்தோனீசியாவும் பலனடைய, இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு தொடர்ந்து வலுவானதாக இருக்க வேண்டும் என்று திரு அன்வார் விருப்பம் தெரிவித்தார்.

திரு பிரபோவோ, மலேசியத் தற்காப்பு அமைச்சர் முகம்மது காலிட் நூர்தீனையும் சந்தித்துப் பேசினார்.

இந்தோனீசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தப்படும் என்று இந்தோனீசியாவின் தற்காப்பு அமைச்சரான திரு பிரபோவோவும் திரு காலிட் நூர்தீனும் உறுதி பூண்டனர்.

இந்தோனீசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையிலான தற்காப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டு அடுத்த நிலைக்கு உயர்த்தப்படும் என்று மலேசியத் தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்