தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரியமில வாயு வெளியேற்றத்தில் 80%க்கு சில நிறுவனங்களே பொறுப்பு

1 mins read
4c5b2a11-4aa4-4128-b6d3-314ba0d12cf0
ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் படிம எரிபொருள் உற்பத்தியை விரிவுபடுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

பெர்லின்: உலகெங்கும் 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளியான கரியமில வாயுவின் பெரும்பகுதிக்கு படிம எரிபொருள், சிமெண்ட் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 57 நிறுவனங்களே பொறுப்பு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாடுகள், அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள் போன்றவை இவற்றில் அடங்கும்.

உலகின் கரியமில வாயு வெளியேற்றத்தில் இத்தகைய நிறுவனங்களின் பங்களிப்பு 80 விழுக்காடு என்று ஏப்ரல் 4ஆம் தேதி வெளியான அறிக்கை தெரிவித்தது.

‘இன்ஃபுளூயன்ஸ் மேப்’ எனும் லாப நோக்கற்ற அமைப்பு, ‘கார்பன் மேஜர்ஸ்’ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கரியமில வாயுவை அதிக அளவில் வெளியேற்றிய நிறுவனங்களின் பட்டியலில் சவூதி அராம்கோ, ரஷ்யாவின் கேஸ்புரோம்ஸ், கோல் இந்தியா ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன. இவை மூன்றுமே அந்தந்த நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமானவை.

2015ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் அவற்றின் படிம எரிபொருள் உற்பத்தியை விரிவுபடுத்தியிருப்பதாக ‘கார்பன் மேஜர்ஸ்’ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திற்குப் பிறகு பல்வேறு அரசாங்கங்களும் நிறுவனங்களும் கடுமையான கரிம வெளியேற்ற இலக்குகளை நிர்ணயித்தபோதும் படிம எரிபொருளை அதிகம் உற்பத்தி செய்துள்ளன. இதனால் கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்