நோன்புப் பெருநாள் நெரிசலைச் சமாளிக்க ஜோகூர் நடவடிக்கை

2 mins read
6695ca06-095d-4250-a342-2f27db324522
போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க, விரைவு நடவடிக்கைக் குழு அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருப்பர் என்று தெரிவிக்கப்பட்டது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜோகூர் பாரு: சிங்கப்பூருடனான ஜோகூரின் இரு நிலச் சோதனைச்சாவடிகளிலும் நோன்புப் பெருநாளை ஒட்டி போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

எதிர்த்திசைத் தடங்கள், 32 அதிகாரிகளைக் கொண்ட விரைவு நடவடிக்கைக் குழு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன.

நோன்புப் பெருநாள் காலகட்டத்தில் மலேசியாவுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜோகூர் குடிநுழைவுத் துறை இயக்குநர் பஹ்ருதீன் தஹிர் கூறினார்.

சென்ற ஆண்டு (2023), சுல்தான் இஸ்கந்தர் கட்டடம் (பிஎஸ்ஐ), சுல்தான் அபு பக்கர் வளாகம் (கேஎஸ்ஏபி) என இரு சோதனைச் சாவடிகள் வழியாக 357,265 பயணிகள் நோன்புப் பெருநாள் காலகட்டத்தில் ஜோகூருக்குச் சென்றனர். நோன்புப் பெருநாளிலும் அதற்கு முன்னும் பின்னுமான இரு நாள்களிலும் அவர்கள் அவ்விரு சோதனைச்சாவடிகள் வழியாக மலேசியா சென்றனர்.

இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் கூடுதலான பயணிகள் ஜோகூர் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றாட அடிப்படையில் ஜோகூரின் இரு சோதனைச்சாவடிகளையும் கடந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை ஜோகூர் குடிநுழைவுத் துறை சுட்டியது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை, அன்றாடம் சராசரியாக 367,076 பயணிகள் பிஎஸ்ஐ, கேஎஸ்ஏபி சோதனைச்சாவடிகளைப் பயன்படுத்தியுள்ளனர். இது கொவிட்-19 கிருமிப் பரவலுக்குமுன் பதிவான எண்ணிக்கையைவிட அதிகம் என்று கூறப்பட்டது.

எதிர்த்திசைத் தடங்களின் பயன்பாடு, காத்திருப்பு நேரத்தைப் பாதியாகக் குறைக்க உதவும் என்று கருதப்படுகிறது.

இந்தத் தடங்கள் திறக்கப்படுவதற்கு, கிட்டத்தட்ட அரை மணி நேரம் முன்னதாக மலேசியக் குடிநுழைவுத் துறை அதுகுறித்த அறிவிப்பை வெளியிடும்.

தேவைப்பட்டால் மோட்டார் சைக்கிள்களை அதிக எண்ணிக்கையில் அனுமதிக்க உதவும் ‘ஹைபிரிட்’ முகப்புகளும் திறக்கப்படும் என்று திரு பஹ்ருதீன் கூறினார்.

போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்க, கியூஆர்டி எனப்படும் விரைவு நடவடிக்கைக் குழுவின் அதிகாரிகள் 12 பேர், பிஎஸ்ஐ சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருப்பர். மேலும் 20 பேர் கேஎஸ்ஏபி வளாகத்தில் பணியில் ஈடுபட்டிருப்பர்.

இரு சோதனைச்சாவடிகளும் மிதமான அளவில் செயல்படும். சில நேரங்களில் தொழில்நுட்பக் கோளாறு அல்லது சீரமைப்புப் பணிகளை முன்னிட்டு சில தடங்கள் மூடப்படலாம் என்று திரு பஹ்ருதீன் கூறினார்.

போக்குவரத்து நிலவரம் குறித்து மலேசியக் குடிநுழைவுத் துறை அதன் சமூக ஊடகப் பக்கங்களில் ஆக அண்மைத் தகவல்களை வெளியிடும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்