கோலாலம்பூர்: அம்னோ இளையரணித் தலைவர் அக்மல் சாலே மலேசியாவின் சாபா மாநிலம், கோத்தா கினபாலுவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
உணர்வுகளைப் புண்படுத்தும் செய்திகளை வெளியிட்டதற்காகவும் அரசுக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியதற்காகவும் அவருக்கு எதிராக காவல்துறை விசாரணை நடைபெறும் வேளையில் கைது நடவடிக்கை இடம்பெற்றது.
பல்பொருள் அங்காடி நிறுவனமான கேகே சூப்பர் மார்ட்டை புறக்கணிக்கக் கோரி தாம் தொடர்ந்து அறைகூவல் விடுக்கப் போவதாக டாக்டர் அக்மல் வியாழக்கிழமை கூறியிருந்தார்.
கேகே சூப்பர் மார்ட்டில் ‘அல்லாஹ்’ என்கிற சொல் அச்சிடப்பட்ட காலுறைகள் விற்கப்பட்ட விவகாரத்தை இழுத்தடிக்க வேண்டாம் என மலேசிய மாமன்னர் புதன்கிழமை எச்சரித்தபோதிலும் டாக்டர் அக்மல் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் வியாழக்கிழமை பேசிய டாக்டர் அக்மல், சுல்தான் இப்ராகிம் இஸ்கந்தர் புறக்கணிப்பு விவகாரத்தை எழுப்பவில்லை என்றார்.
“புறக்கணிப்பு பற்றி மாமன்னர் எப்போது சொன்னார்? முதல் நாளிலிருந்தே அந்நிறுவனத்தைப் புறக்கணிக்குமாறு மட்டுமே நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம். வேறெதையும் நாங்கள் கேட்கவில்லை. புறக்கணிப்பு சட்டவிரோதமானது அல்ல,” என்று டாக்டர் அக்மல் கூறினார்.
இந்நிலையில், சாபா தலைநகர் கோத்தா கினபாலுவில் உள்ள பிரதான விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை தாம் வந்திறங்கியபோது காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டதாக ஃபேஸ்புக் பதிவில் டாக்டர் அக்மல் தெரிவித்தார்.
காவல்துறை வாகனத்தில் ஏறியபோது, “அச்சமில்லை, சரணடையவில்லை” என்று அவர் கூறியதாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன. காவல்துறையுடன் தாம் ஒத்துழைப்பதாக ஃபேஸ்புக்கில் அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
டாக்டர் அக்மலிடமிருந்து காவல்துறை வாக்குமூலம் பெற்றுக்கொண்ட பிறகு இரண்டு மணி நேரம் கழித்து அவர் கோத்தா கினபாலு காவல்துறை தலைமையகத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
கேகே சூப்பர் மார்ட் விவகாரம் குறித்து அவருக்கு எதிராக விசாரணை தொடங்கியுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டது.

