அம்மான்: கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் சிரியாவின் வடமேற்குப் பகுதியில் ஈராக்கைச் சேர்ந்த முன்னணி பயங்கரவாதத் தலைவர் ஒருவர் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
வியாழக்கிழமையன்று (ஏப்ரல் 4) அந்தத் தற்கொலைத் தாக்குதல் நிகழ்ந்தது. ஒருவர் தனது விருந்தினர் விடுதியில் வெடிகுண்டைக் கொண்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் அபு மரியா அல் காஹ்டானி எனும் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக பெயரை வெளியிட விரும்பாத மூவர் தெரிவித்தனர்.
மாண்டவரின் உண்மையான பெயர் மயிசர் அல் ஜபூரி. தற்கொலைத் தாக்குதலால் மோசமான காயங்களுக்கு ஆளான அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
சர்மாடா நகரில் காஹ்டானியைச் சந்தித்து வாழ்த்திய சில வினாடிகளுக்குப் பிறகு ஒருவர் தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்கிறார். அந்தத் தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்ததாகவும் தகவல் தெரவித்த மூவர் குறிப்பிட்டனர்.
காஹ்டானி, அல்-காய்தா அமைப்பிலிருந்து உருவான நுஸ்ரா ஃபிரன்ட் அமைப்பை சிரியாவில் நிறுவியவர். நுஸ்ரா ஃபிரன்ட், அல்-காய்தா உடனான தொடர்புகளைத் துண்டித்துக்கொண்ட பிறகு அதன் பெயர் ஹயாட் டாஹிர் அல் ஷாம் (எச்டிஎஸ்) என்று மாற்றப்பட்டது.

