தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இடிந்து விழுந்த பால்டிமோர் பாலத்தை ஆய்வு செய்த அதிபர் பைடன்

1 mins read
5712f987-8f4a-4ee3-803a-baa257cf7ee2
புதிய பாலத்தைக் கட்ட தேவையான நிதியை ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடிய விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்தார். - படம்: புளூம்பர்க்

வாஷிங்டன்: அமெரிக்காவின் பால்டிமோர் துறைமுகத்தில் மார்ச் 26ஆம் தேதியன்று கப்பல் ஒன்று மோதியதை அடுத்து, ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது.

பாலத்தில் இருந்த ஆறு ஊழியர்கள் ஆற்றில் விழுந்து மாண்டனர்.

ஆற்றில் உள்ள இடிபாடுகள் காரணமாக அவ்வழியாகக் கப்பல் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இடிபாடுகளை அகற்ற பாரந்தூக்கிகள் அனுப்பிவைக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்த இடத்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஏப்ரல் 5ஆம் தேதியன்று ஹெலிகாப்டரிலிருந்து பார்வையிட்டார்.

அவ்விடத்தை ஆய்வு செய்ய அவர் அங்கு அதிகாரிகளுடன் சென்றார்.

இடிபாடுகள் ஆற்றிலிருந்து அகற்றப்பட்டதும் பாலம் மீண்டும் கட்டப்படும் என்றும் துறைமுகத்தின் செயல்பாடுகளை வழக்கநிலைக்குக் கொண்டு வர அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.

புதிய பாலத்தைக் கட்ட தேவையான நிதியை ஒதுக்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடிய விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

பாலம் இடிந்து விழ காரணமானவர்களும் அதைக் கட்ட ஏற்படும் செலவில் ஒரு பகுதியை ஏற்க வைக்கப்படுவர் என்று அவர் சூளுரைத்தார்.

பாலம் இடிந்து விழுந்ததில் மாண்டோரின் குடும்பத்தினரை அதிபர் பைடன் சந்தித்துத் தமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்