வன்முறைக்கு பலியான பள்ளி மாணவர்; ஒரே வாரத்தில் இரண்டு தாக்குதல் சம்பவங்கள்

1 mins read
92c9e4dc-6fbb-4d33-b7d2-29ddd24c5ab7
பதின்ம வயதினர் இடையே ஒருவித கட்டுப்பாடற்ற வன்முறை போக்கு தலைதூக்குவதாக பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் குறிப்பிட்டார். - படம்: இபிஏ

பாரிஸ்: வன்முறைத் தாக்குதலுக்கு ஆளான பிரெஞ்சு பள்ளி மாணவர் ஒருவர், காயங்களால் ஏப்ரல் 5ஆம் தேதி உயிரிழந்தார்.

வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த 15 வயது சிறுவன், தன் பள்ளி அருகே ஏப்ரல் 4ஆம் தேதி மிகக் கடுமையான முறையில் தாக்கப்பட்டதாகவும் மாரடைப்பு காரணமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மறுநாள் பகல் அந்தச் சிறுவன் மாண்டுவிட்டதாகக் கூறப்பட்டது.

ஒரே வாரத்தில் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இதுவே இரண்டாவது முறை.

இதேபோல் தன் பள்ளிக்கு வெளியே 13 வயது சிறுமி ஒருவர் ஏப்ரல் 2ஆம் தேதி தாக்கப்பட்டு தற்காலிக கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மிக அண்மைய தாக்குதல் சம்பவத்தில் சிறுவன் தாக்கப்பட்டதை அடுத்து கொலை, கும்பலாகத் தாக்குதல் தொடர்பில் 17 வயது நபர் ஒருவரைக் காவல்துறையினர் தடுத்துவைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையேர, சில இளையர்கள் மத்தியில் ‘கட்டுப்பாடற்ற வன்முறை’ போக்கு காணப்படும் நிலையில் அதற்கு எதிராகப் பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன் எச்சரித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்