ஈரான் பதில் தாக்குதல் நடத்தலாம்: விழிப்புநிலையில் அமெரிக்கா, இஸ்ரேல்

ஈரான் பதில் தாக்குதல் நடத்தலாம்: விழிப்புநிலையில் அமெரிக்கா, இஸ்ரேல்

2 mins read
86121b7c-b0f9-48b0-adf3-1a10975094eb
அமெரிக்க, இஸ்ரேலிய வளங்களை ஈரான் தாக்கும் சாத்தியம் உள்ளதால் அமெரிக்கா உயர் விழிப்புநிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: ராய்ட்டர்ஸ் கோப்புப் படம்

வாஷிங்டன்: ஈரானின் குட்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த மூத்த படைத் தளபதிகள் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

அந்தப் படைத் தளபதிகளின் பொது இறுதிச் சடங்கு சனிக்கிழமை (ஏப்ரல் 6) அன்று நடைபெற்றது. அதில் தனது படைத் தளபதிகள் கொல்லப்பட்டதற்கு தான் பழிதீர்த்துக் கொள்ளப்போவதாக ஈரான் சூளுரைத்தது. இதனால், மத்திய கிழக்கில் வெளிப்படையாக போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், தனது தாக்குதல் எப்பொழுது எவ்வாறு அமையும் என்பதை ஈரான் விளக்கவில்லை.

இஸ்ரேல் சிரியாவின் டமாஸ்கஸ் நகர் மீது ஏப்ரல் 1ஆம் தேதி நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கும் அமெரிக்கா, அமெரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் அதற்கான தயார்நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

“நாங்கள் உண்மையிலேயே உயர் விழிப்புநிலையில் இருக்கிறோம்,” என்று அமெரிக்காவின் சிஎன்என் செய்தித் தகவலை உறுதிசெய்தார் அமெரிக்க அதிகாரி ஒருவர். ஈரானிய தாக்குதல் அடுத்த வாரம் நடக்கலாம் என்று சிஎன்என் செய்தித் தகவல் கோடி காட்டியது.

இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படையினர் உயர் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பேசிய இஸ்ரேலிய அதிகாரி ஒருவர், இஸ்ரேலும் தனது படையினரை உயர் விழிப்புநிலையில் வைத்திருப்பதாகத் தெரிவித்தார். அதன்படி, அந்நாட்டு போர்ப் படைப் பிரிவு வீரர்களின் விடுப்பு நாள்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதுடன் தற்காப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த சில ஓய்வுபெற்ற வீரர்களையும் பணிக்கு திரும்ப அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜிபிஎஸ் எனப்படும் உலகத் தரைத் தொடர்பு சமிக்ஞை வசதியையும் தடை செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிக் கருத்துரைத்த பெயர் வெளியிட விரும்பாத இரு ஈரானிய அதிகாரிகள் தங்கள் நாடு அனைத்துப் படைப் பிரிவுகளையும் முழு விழிப்புநிலையில் வைத்துள்ளதாகத் தெரிவித்தார். இதில் டமாஸ்கசில் மேற்கொள்ளப்பட்டத் தாக்குதலுக்கு, இனி இதுபோல் நடப்பதைத் தடுக்க, நேரடியாக பதில் தாக்குதல் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்