ஜோகூர் பாரு: மலேசிய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் சிங்கப்பூர் வந்துகொண்டிருந்தபோது ஜோகூர் பாருவில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
சம்பவ இடத்திலேயே அவர் மாண்டுவிட்டதாக மருத்துவ உதவியாளர்கள் பின்னர் அறிவித்தனர்.
29 வயது ஆடவர் ஒருவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 5) காலை சிங்கப்பூர் வந்துகொண்டிருந்தபோது, ஜோகூர் பாரு சோதனைச்சாவடியில் மூச்சுவிட சிரமப்பட்டதாக ஓரியண்டல் டெய்லி செய்தி தெரிவித்தது.
அந்த மலேசிய மோட்டார்சைக்கிளோட்டி தரையில் மயங்கி விழுந்தார்.
மலேசிய ஊடகங்களிடம் பேசிய ஜோகூர் பாரு தெற்கு காவல்துறை தலைவர் ரவுப் செலாமாட், வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகளுக்குச் செய்தி கிடைத்ததை உறுதிப்படுத்தினார்.
அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சுல்தானா அமினா மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ ஊழியர்கள் அறிவித்ததும் தெரியவந்தது.
மருத்துவமனை இருக்கும் இடத்தின் அடிப்படையில், கடற்பாலத்துடன் இணைக்கப்பட்ட ஜோகூர் பாரு சோதனைச்சாவடியில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம்.
இந்தச் சம்பவத்தில் சூது இருப்பதாக மலேசிய காவல்தூறை சந்தேகிக்கவில்லை. இச்சம்பவத்தை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஆடவரை 29 வயது ஃபாரிஸ் அஸ்மி என்று சின் சியூ டெய்லி செய்தி நிறுவனம் அடையாளம் காட்டியது.
இரண்டு மாதங்கள் கர்ப்பமாக உள்ள மனைவியையும் 10 மாத ஆண் குழந்தையையும் அந்த ஆடவர் விட்டுச் செல்கிறார்.