தைவான் நிலநடுக்கம்: தேடி மீட்கும் பணி தொடரும் வேளையில் மேலும் நில அதிர்வுகள்

தைவான் நிலநடுக்கம்: தேடி மீட்கும் பணி தொடரும் வேளையில் மேலும் நில அதிர்வுகள்

2 mins read
3ea1c5f8-be90-4f9a-9cfe-746e0b4c11b1
தைவானில் ஏப்ரல் 3ஆம் தேதி ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை அடுத்து கட்டட இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட தேடல், மீட்புப் பணியினர். - படம்: நியூயார்க் டைம்ஸ்

தைப்பே: தைவானின் தலைநகர் தைப்பேயில் ஏப்ரல் 8ஆம் தேதி நிலநடுக்கத்துக்குப் பிந்திய நில அதிர்வினால் கட்டடங்கள் ஆட்டம் கண்டன.

ஏப்ரல் 3ஆம் தேதி, 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தைவானின் ஹுவாலியன் நகரை உலுக்கியதில் 13 பேர் மாண்டனர்.

கடந்த 25 ஆண்டுகளில் ஆக வலுவான அந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு நூற்றுக்கணக்கான நில அதிர்வுகள் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இன்னும் ஆறு பேரைக் காணவில்லை எனும் நிலையில் மலைப்பகுதிகளில் அவர்களைத் தேடி மீட்கும் பணிகள் தொடர்கின்றன.

ஆஸ்திரேலிய-சிங்கப்பூர் தம்பதி, ஒரு தாயார், அவரின் இரு பிள்ளைகள் ஆகியோர் காணாமற்போனோரில் அடங்குவர் என்று தைவானின் அவசரகால நடவடிக்கை நிலையம் தெரிவித்தது. அவர்கள் ஐவரும் தரோகோ கார்ஜ் எனும் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பாறைச் சரிவின் அடியில் தாயாரும் பிள்ளைகளும் சிக்கியிருக்கக்கூடும் என்று மீட்புப் பணியாளர்கள் தேடிவருகின்றனர். பிள்ளைகளின் சகோதரி, தந்தை ஆகியோரின் சடலங்கள் ஏற்கெனவே மீட்கப்பட்டன.

அவர்களையும் சேர்த்து 13 பேர் மாண்டதாகவும் 1,150 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.

காணாமற்போன ஆறாமவர், சுண்ணாம்புக்கல் சுரங்க ஊழியர் என்று கூறப்பட்டது.

(இடது) ஆஸ்திரேலிய-சிங்கப்பூர் தம்பதி நியோ சியூ சூ-சிம் ஹுவீ கொக் இருவரும் தைவானின் தரோகோ கார்ஜ் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர்.
(இடது) ஆஸ்திரேலிய-சிங்கப்பூர் தம்பதி நியோ சியூ சூ-சிம் ஹுவீ கொக் இருவரும் தைவானின் தரோகோ கார்ஜ் பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். - படங்கள்: சன்னி சேண்ட் ரோ வாங்/ஃபேஸ்புக், ஏஎஃப்பி

நிலச்சரிவுகள், இடிந்த கட்டடங்கள் ஆகியவற்றால் இடிபாடுகளில் சிக்கியிருந்த 600க்கும் மேற்பட்டோரை மீட்புப் பணியாளர்கள் சென்ற வாரயிறுதியில் மீட்டனர்.

மோசமான வானிலையால் காணாமற்போனோரைத் தேடி, மீட்கும் பணியில் சவால்களை எதிர்நோக்குவதாக அதிகாரிகள் கூறினர்.

இவ்வேளையில், ஏப்ரல் 8ஆம் தேதி அந்தப் பகுதியில், நிலநடுக்கத்துக்குப் பிந்திய வலுவான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் அது 4.8 ரிக்டராகப் பதிவானதாகக் கூறப்பட்டது.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்